- ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்) 2.07.2023 -
"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே"
- வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -
1.
இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பலகணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.
வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்! வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை மரங்களுமே. வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.