அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள்.