- இசை & குரல் - AI SUNO -
[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]
கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -
Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.