எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சு.ரா.வின் 'அந்தரத்தில் பறக்கும் கொடி' என்னும் தொகுப்பிலுள்ளது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் ஒருவர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்லி. அவரைப் பற்றி கட்டுரைகள் எவை கண்ணில் தட்டுப்பட்டாலும் வாசிக்கத் தவறுவதில்லை. இந்தக் கட்டுரையை முன்பொரு தடவை வாசித்ததாகவும் நினைவு. இம்முறை ஆழ்ந்து வாசித்தேன். இவ்விதம் வாசிக்கையில் சு.ரா அவர்களின் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:
"....கடன்காரர்கள் அவன் கழுத்தில் சுருக்கைப் போட்டு இழுக்கின்றார்கள். துன்பத்திலும், வறுமையிலும் ,தனிமையிலும் உழல்கிறான். அப்போது அவன் எழுதத்தொடங்கிய நாவல்தான் 'குற்றமும் தண்டனையும்'
இதனை வாசித்தபோது சு.ரா எவ்விதம் இவ்விதமானதொரு வரலாற்றுத் தவறினை விட்டிருக்க முடியும் என்னும் சிந்தனை ஓடிற்று. காலச்சுவடு பதிப்பகம் மிகவும் அவதானமாகப் பிழை, திருத்தம் செய்பவர்கள் என்ற கருத்தொன்றும் நிலவுகின்றது. இது முக்கியமான வரலாற்றுத் தவறு.