'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, July 18, 2024
கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்
- இசை & குரல்: AI SUMO -
கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டே நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.
கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.
அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
[ இசை & குரல் - AI Suno | யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ ]
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -
- இசை & குரல் - AI SUNO -
[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]
கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -
Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.
Wednesday, July 17, 2024
பாடல் - குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -
- இசை & குரல் - AI SUNO -
[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது. வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI SUNO வுக்கு நன்றி ]
'YouTube' Link - https://www.youtube.com/watch?v=Iuy2svIdTp8&feature=youtu.be
பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -
பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.
என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை
இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.
வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.
பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -
- இசை & குரல்; AI Suno | ஓளிப்பதிவு: AI Hedra -
பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra
- பாடலை முழுமையாகக் கேட்க - பாடல் - ஆசை - வ.ந.கிரிதரன் =
பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்
அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.
பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.
பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.
பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.
பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra
கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.
கண்ணா
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு?
எதற்காக இந்தச் சிந்திப்பு?
கண்ணா,
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.
கண்ணா,
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.
கண்ணா,
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
Tuesday, July 16, 2024
பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno
நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra
நான் பிரபஞ்சத்துக் குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.
நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.
நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.
காலவெளிக் குழந்தை நான்.
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra
பாடல்: நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
| இசை & குரல்: AI Suno
நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்து, ரொக் இசை வடிவில் பாடலை உருவாக்கித் தா என்றேன். தந்தது. பிரமித்துப் போனேன்.
பாடலை முழுமையாகக் கேட்டு மகிழுங்கள்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்
நான் பிரபஞ்சத்துக் குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.
நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.
நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.
காலவெளிக் குழந்தை நான்.
காலவெளியின் பகுதி நான்.
காலவெளியாய்க்
களிப்பேன். மிகவும்
களிப்பேன்.
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
Monday, July 15, 2024
இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை'
'காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.
இது பாட்டு கேட்கும் நேரம் : 'அன்புள்ள மான் விழியே. ஆசையில் ஓர் கடிதம்'
ஏ.வி.எம் தயாரிப்பான 'குழந்தையும் தெய்வமும்' சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேபி பத்மினியின் இரட்டை வேட நடிப்பு. The Parent Trap என்னும் அமெரிக்கத்திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஜேர்மன் நாவலான Lisa and Lottie என்னும் நாவலின் திரை வடிவம்தான் ' The Parent Trap'. கிருஷ்ணன்-பஞ்சுவின் (பஞ்சு அருணாசலமென்று தவறாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டிய நண்பர் கணேஷ்வரன் வீரகத்திக்கு நன்றி) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.
நண்பர்களுடன் ஒரு சந்திப்பு!
அண்மையில் நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, குருபரன், யோக வளவன் ஆகியோருடன் டிம் ஹோர்டன் கோப்பிக் கடையொன்றில் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் உரையாடினோம். இலக்கியம், சமூக ஊடகம், அரசியல், பாடசாலை அனுபவங்கள் எனத்தொடங்கி தமிழகத்து டீ மாஸ்டர் வரை பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) , குருபரன் ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அறிமுகமான நண்பர்கள். யோக வளவன் எழுத்தாளர்களான வடகோவை வரதராஜன், அமரர் கோமகன் ஆகியோரின் சகோதரர். கனடாவில் அறிமுகமானவர்.
வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!
காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.
கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -
காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
Friday, July 12, 2024
கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -
இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
Thursday, July 11, 2024
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண் நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.
என் ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளும் வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!
இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!
இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை.
Wednesday, July 10, 2024
கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
இங்கு எனது அண்மையில் முகநூலில் வெளியான கண்ணம்மாக் கவிதையின் சில வரிகளைச் செயற்கை நுண்ணறிவு எவ்விதம் கையாள்கின்றதென்பதைக் காட்டும் காணொளி இது. சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது. குறிப்பாக காலவெளிப்புள் என்பதில் வல்லினம் மிகும், அதில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது.
கவிதை: எழுக அதிமானுடா! - வ.ந.கிரிதரன் -
'எழுக அதிமானுடா!' என்னும் இக்கவிதையை எண்பதுகளில் என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். தாயகம் (கனடா) பத்திரிகையில் முதன் முதலில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் பிரசுரமானது. எனது 'எழுக அதிமானுடா' , 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்புகளிலும் வெளியானது. எண்பதுகளில் எழுதிய கவிதையின் வரிகளை அக்காலத் தோற்றத்தில் வாசித்தால் எப்படியிருக்கும்? இப்படியிருக்கும்.
எழுக அதிமானுடா!
'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.
ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் கூறுவதென்ன?
ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் வெளி, நேரம் மற்றும் ஒளி வேகம் பற்றிக் கூறுவதென்ன?
வெளி, நேரம் இரண்டும் சுயாதீனமானவை அல்ல. சுற்றிவர நிகழும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவை. சார்பானவை. இப்பிரபஞ்சத்தில் ஒளிவேகம் மட்டுமே சார்பற்ற ஒன்று. கால, வெளி இரண்டு பிரிக்கப்பட முடியாதவை. காலவெளி என்றே அவை எப்பொழுதும் இணைந்திருக்கும்.
கவிதை: எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -
நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும் என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.
'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -
முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய ‘ வேடங்கள்.
Tuesday, July 9, 2024
எந்தையும் நானும்!
என் தந்தையாரை நான் என் பதின்ம வயதுகளில் இழந்து விட்டேன். ஆனால் எழுத்து, வாசிப்பு ஆர்வத்துக்கு அடிகோலியவர் அவரே. அவருடன் கழிந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. குறிப்பாக இரவுகளில் குருமண்காட்டில் , வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடி இருப்பார்.
ஓவியம் பேசினால்...
நியூயோர்க் மாநகரத்து வீதி ஓவியர் எண்பதுகளில் என்னைப்பார்த்து வரைந்த ஓவியம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவமொன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவு இது.
எழுத்தாளர் மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில் வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), எம் பால்ய பருவத்தில் இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்தது. அதனால் அவ்வாசிப்பனுபவம் இன்றும் எம் நினைவுகளில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கிறது,
Monday, July 8, 2024
நானே நானா? இது யாரோ தானா?
என் முகநூற் பதிவொன்றிலிருந்து சில வசனங்களை என் பதின்ம வயதில் கூறியிருந்தால், குரல் தவிர, எப்படியிருந்திருக்கும்?
கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்
எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:
பாரதியார் நான் பேசுகின்றேன்!
பாரதியாரின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' கவிதையினை அவரே நம் முன் வந்து பாடினால் எப்படியிருக்கும்?
எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.
இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.
இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.
Friday, July 5, 2024
கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.
Thursday, July 4, 2024
'இறைவன் என்றொரு கவிஞன். அவன் படைத்த கவிஞன் மனிதன்' - கவிஞர் கண்ணதாசன்
இறைவனைக் கவிஞனாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். மகான்களை அக்கவிதைகளில் காவியங்கள் என்கின்றார். கவிஞரின் இக்கற்பனைச் சிறப்புக்காகவே எனக்குப் பிடித்த பாடலிது. பாடலுக்கு எஸ்.பி.பி.யின் குரலும், பாப்பாவின் இசையும், ரவிச்சந்திரனின் நிதானமான நடிப்பும் இப்பாடலின் மேலதிகச் சிறப்பம்சங்கள்.
கவிதை: ஜிம்மி - வ.ந.கிரிதரன் -
ஜிம்மி! முதலில் நினைவுக்கு வருவது
பபா வீட்டு ஞமலி!
பபா என் பால்ய காலத்து நண்பன்.
பபா பற்றி நினைத்ததும்
ஜிம்மி பற்றிய நினைவுகளும் வந்து விடும்.
உடும்பு
பிடிப்பதில் பிரியமும், வல்லமையும்
ஜிம்மிக்கு உண்டு.
எப்பொழுதும் பபாவின் முன்
வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் ஜிம்மியின்
தோற்றம் இன்னும் நினைவில் மங்கிவிடவில்லை.
உடும்பின் ஈரலை அதன் மூக்கில் பபா பூசி விடுவான்.
அது ஒன்று போதும் ஜிம்மிக்கு.
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓடும்
ஜிம்மிக்குப் பின் நாமும் ஓடுவோம்.
Wednesday, July 3, 2024
கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நோக்கலில் இரக்கம்!
பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.
இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.
பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.
இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.
இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.
நெடுமழை!
கடுமழை!
அடைமழை!
மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.
girinav@gmail.com
நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more
girinav@gmail.com
Tuesday, July 2, 2024
வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'
சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.
'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.
Friday, June 28, 2024
கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர் Kinga Surma திடீரென ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -
நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.
நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.
எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில். ]
2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.
என்னைக் கவர்ந்த அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'
ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.
அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.
அ.ந.க மார்க்சியத்தத்துவங்களின் அடிப்படையில் இயங்கிய சமூக,அரசியற் செயற்பாட்டாளரும் கூட. அதே சமயம் அவரது கவிதைகளில் இது போன்ற சிந்தனையாற்றலையும், தேடல்களையும் உள்ளடக்கிய கருத்துகளையும் காணலாம். இலங்கைத்தமிழ்க் கவிதைகள் மட்டுமல்ல உலகத்தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிலும் நிச்சயம் இடம் பெற வேண்டிய கவிதை இது.
Thursday, June 27, 2024
குதிக்க வைக்கும் வான் கேலன் இசைக்குழுவின் 'குதி' (Jump)!
வான் கேலன் இசைக்குழுவைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவர்களது புகழ்பெற்ற 'Jump' பாடல்தான். குழுவின் பிரதான பாடகர், கிட்டார் கலைஞர் இவர்களுடன் ஏனைய இசைக் கலைஞர்களும் சிறப்பாக இணைந்து அப்பாடலை உருவாக்கியிருப்பார்கள்.
வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதையான ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...