Wednesday, April 24, 2024

தொடர் நாவல்: மனக்கண் (5) - சலனம் - அ.ந.கந்தசாமி -


ஐந்தாம் அத்தியாயம்: சலனம்



பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்?  இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

Tuesday, April 23, 2024

தொடர் நாவல் : மனக்கண் (4): அத்தியாயம் நான்கு - தங்கமணி - அ.ந.கந்தசாமி -


4-ம் அத்தியாயம்: தங்கமணி


“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் 'வழமையான இடம்.'  இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி 'ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அதை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர்!


அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

உலகப் புத்தக நாள்


இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.

எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம்.  புத்துணர்வினை, இன்பத்தினை   அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.

இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.

இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  அவர்கள்  சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.

Monday, April 22, 2024

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

Sunday, April 21, 2024

எம்ஜிஆரின் 'என் தங்கை'


எம்ஜிஆரின் நடிப்பைப் பார்க்கவேண்டுமானால் பார்க்க வேண்டிய திரைப்படம் 'என் தங்கை' அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான கதை. முடிவில் அவலச்சுவை மிகுந்தது.
எம்ஜிஆர் தன் ஆரம்ப காலத்தில் சமூகப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். அந்தமான் கைதி, நாம், என் தங்கை , பணக்காரி அவற்றில் சில. 

Friday, April 19, 2024

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!


    எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Wednesday, April 17, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-


அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!


"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் கூடிய பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.

Infowhiz Systems's Services: domain registration, hosting, web design, online security, and email!


இன்ஃபோவிஷ் சிஸ்டம்ஸ் (Infowhiz Systems) domain registration, hosting, web design, online security, and email ஆகிய சேவைகளை நியாயமான விலையில் வழங்குகின்றது. அதன் சேவைகளைப் பாவியுங்கள்! பயனடையுங்கள்!



https://www.infowhizsystems.com/

Monday, April 15, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!


மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.

அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட  காலத்து எண்ணம்.அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

Tuesday, April 9, 2024

சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!


நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு.  எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.

கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு.  எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.


இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?

அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு.  பிரபஞ்சத்தின்  நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து  கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான  விடையொன்றின்  சிறு துளி.

Wednesday, April 3, 2024

காங்கிரஸ் நூலகமும், 'வேர்ல்கட்' (Worldcat) இணையத்தளமும், அவற்றின் பயனுள்ள சேவைகளும்! - வ.ந.கிரிதரன்

'அமெரிக்க காங்கிரஸ்' (The Library of Congress) , https://www.loc.gov/, நூலகத்தில் பயனுள்ள தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. சுமார் 10,000ற்கும் அதிகமான தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. எனது மண்ணின் குரல் (1998) , அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு), வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஆகிய நூல்களை அங்கு கண்டு வியந்து போனேன்.
Worldcat.org பயன்மிக்கதொரு தளம். இதில் அங்கத்தவர்களாகவுள்ள , உலகின் பல பாகங்களிலுள்ள நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்களைத் தருமொரு தளம். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம். எனது நூல்கள் பல யாழ் பொதுசன நூலகம், யாழ் பல்கலைககழக நூலகம், பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றிலுள்ளன. ஆனால் அவை பற்றிய விபரங்களை வேர்ல்கட் இணையத்தளத்தில் தேடியபோது காணவில்லை. அந்நூலகங்கள் 'வேர்ல்கட்'டில் அங்கத்தவர்களாக இன்னும் இணையவில்லையென்று நினைக்கின்றேன். அந்நூலகங்கள் இணைவது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இணைவது பற்றி இந்நூலகங்கள் சிந்திக்க வேண்டும்.

Tuesday, April 2, 2024

ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -

                                                     -எழுத்தாளர்  ஜெகசிற்பியன் -

எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான  கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம்,  சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல்.  மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான  தொடர் நாவல்.

Monday, April 1, 2024

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -


எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’


காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.

இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.

Sunday, March 31, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!


அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்?  ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.

Saturday, March 30, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'


புகலிடத்தமிழ் இலக்கியப்பரப்பில் பல சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிக்கொண்டுள்ளன. இவற்றில் முதலில் வெளியான முக்கிய தொகுதி மித்ர பதிப்பக வெளியீடான 'பனியும் பனையும்'.
எழுத்தாளர்கள் எஸ்.பொ & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரையில் , பல்வேறு நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு.
 
பதிப்பு விபரம்: பனியும் பனையும்;: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக்கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94: கோகில ஸ்ரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18*12 சமீ.

Friday, March 29, 2024

'ஜீவகீதம்' ஜெகசிற்பியன் - ஜீவி - (எழுத்தாளர் ஜீவியின் 'பூவனம்' வலைப்பதிவிலிருந்து)


 
என் பால்ய, பதின்மப் பருவங்களில் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெகசிற்பியன். கல்கியில் வெளியான இவரது நாவல்களான 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்', 'சொர்க்கத்தின் நிழல்', 'பத்தினிக்கோட்டம்' என்னிடம் பைண்டு செய்யப்பட்ட நிலையிலிருந்தன. இவரது இன்னுமொரு சரித்திர நாவலான 'நந்திவர்மன் காதலி' (ராணிமுத்து பிரசுரமாக வெளியானது) எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று நாவல்களிலொன்று.
 
எழுத்தாளர் ஜீவி அவர்கள் தனது 'பூவனம்' வலைப்பதிவில் சிறப்பானதொரு ஜெகசிற்பியன் பற்றிய நனவிடை தோய்தலைச் செய்துள்ளார். அதனை நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

Wednesday, March 27, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!


மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.

கவிஞர் கண்ணதாசன் : நவீன கணியன் பூங்குன்றனார்!


'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்'

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. 'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

Tuesday, March 26, 2024

அன்னை நினைவுகள்!


அன்னையே!
இருப்பில் நீ இருந்த இறுதி நாள்
இன்று உனை நாம்
இழந்த நாளும் கூடத்தான்.
இருப்பின் வடிவம் நீ நீங்கிடினும்
இருக்கின்றாய் எம்மில்
உணர்வாய், உயிரணுவாய் நிறைந்து.
இருக்கின்றவரையில்
இருப்பாய் எம் சிந்தையில்
இன் நினைவுகளாய்.
 
'நவரத்தினம் டீச்சர்' என்று ஊருனை அறியும்.
நமக்கோ பாசமிகு 'அம்மா'.
அம்புலி காட்டி , அதிலிருக்கும் ஆச்சி பற்றி
அன்று நீ அன்னமூட்டிய தருணங்கள்
இன்றும் பசுமையாய் இருக்கின்றன.
 
அவ்வப்போது நீ பாடி
அகம் மகிழ்வித்த பாரதி பாடல்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டுள்ளன.
 
இரவு நீங்கும் முன எழுந்து
உணவு சமைத்து, பொதிகளாக்கி
உன்னுடன் பாடசாலை கூட்டிச் செல்வாய்.
உன் அரவணைப்பில் நாம் நடந்த
உவகை மிகு நாட்களவை.
 
கண்டிப்பிலும் உன்னால் கோப உணர்வுகளைக்]
காட்ட முடிந்ததில்லை.
கனிவு தவிர எதை நீ காட்டினாய்?
 
பின்னர் வளர்ந்து பெரியவனாகி
பிற தேசம் படிக்கச் சென்று
அவ்வப்போது ஊர் திரும்பி மீள்கையில்
அதிகாலையெழுந்து , உணவு சமைத்து,
அகமகிழ்வுடன் பின்னர் உண்ண
அதனைப் பொதியாக்கித் தருவாய்.
தொடருந்து நிலையம் நோக்கிச் செல்கையில்
தொலைவு நோக்கிச் செல்லும் மகன் நோக்கித்
தொடர்ந்து வரும் உன் பார்வை.
வாசலில் நீ நிற்கும் கோலமும், உன்
வதனத்தில் படர்ந்திருக்கும் மெல்லிய சோகமும்,
அதிகாலை மெல்லிருளில் தலைவிரிக்கும் பனைப்பெண்களின்
சரசரப்பைக் கேட்டுச் செல்லும் என்னை இன்றும்
தொடர்ந்து வரும் விந்தையென்ன!
 
அன்னையே! எம் தெய்வம் நீ!
அன்னையே! எம் உயிர் நீ!
அன்னையே!
இருக்கும் வரை எம்
இருப்பின் வழிகாட்டி நீ.

Sunday, March 24, 2024

காலத்தால் அழியாத கானம்: 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.'


எனக்குப் பிடித்த கவிஞர் உடுமலை நாராயண கவியின் பாடல்களிலொன்று. தேவரின் 'விவசாயி' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இசையமைத்திருப்பவர் 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன். நடிப்பு - எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயா. பாடியவர்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா.
 
காதலர்கள் இருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரையாடல் இனிக்கின்றது. 'காதில் இனிக்கிறது'. அதனால்தான் கவிதையை இனிக்கும் செவிநுகர் கனிகள் என்றார்கள்.
 

மனத்தில் நிற்கும் மதுரை வீரன்!


1956 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளியான தமிழ்த்திரைப்படம் 'மதுரை வீரன்'. 36 திரையரங்குகளில் 100 நாட்களையும், மதுரை சிந்தாமணியில் 200 நாட்களையும் கடந்து ஓடிப் பெருவெற்றியடைந்த திரைப்படம். எம்ஜிஆரைத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக்கிய திரைப்படம் மதுரை வீரன் என்பர் திரையுலக ஆய்வாளர்கள்.   அதுவரை வசூலில் சந்திரலேகா புரிந்திருந்த சாதனையை  மதுரை வீரன் முறியடித்ததாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் எனப் பலர் , அந்நாளைய முன்னணி நடிகர்கள், நடித்திருக்கின்றார்கள்.

Friday, March 22, 2024

தொடர் நாவல்: மனக்கண் (3) மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

 

மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.  இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில்  நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.

Thursday, March 21, 2024

உமாசந்திரனின் 'முழுநிலா'


என் பால்யப் பருவத்தில் விகடனில் தொடராக வெளியான நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று உமாசந்திரனின் 'முழு நிலா'. அதில் வரும் உப்பிலி, நளினா பாத்திரங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அப்பாவுக்கும் மிகவும் பிடித்த நாவல் அது . கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவலை அக்காலகட்டத்தில் மிகவும் விரும்பி வாசித்தோம். 

Tuesday, March 19, 2024

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர்காயும் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். - வ.ந.கிரிதரன் -


அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.  இவரது நாவலான 'பொன்மாலைப்பொழுது ' தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே  அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகத் தளக்குறிப்பு கூறுகிறது:

புதுமைப்பித்தனின் 'பொன்னகர'மும் , ஜெகசிற்பியனின் 'இது பொன்னகரம் அல்ல'வும்!


புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' அளவில் சிறிய , ஆனால் மிகவும் கடுமையாகச் சமூகத்தைச் சாடும் விவரணச் சித்திரம். அதில் அம்மாளு என்னும் வறிய பெண், நோயால் வாடியிருக்கும் தன் கணவனுக்காகத் தன்னை விற்கின்றாள்.

Friday, March 15, 2024

இரு வேறு காலகட்டக் கதைகளிரண்டும், சில ஒற்றுமைகளும்! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன.  அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதை, போதமும் காணாத போதம் 07 என் கவனத்தை ஈர்த்தது. அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக்  கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். இருவரும் ஒரு நாள் சந்திக்கின்றார்கள்.  அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.

-  சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது.

“நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார்.

“அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன்.

சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார்.

வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன.  சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு  என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின.

துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான்.

புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. -


இப்பகுதியை வாசித்தபோது எனக்கு என் நாவலான 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' பகுதியின் இறுதிப் பகுதி நினைவுக்கு வந்தது. சிறுவன் என்பவன் தானிருந்த  அமைப்புக்குத் தன் நண்பன் ஒருவனை அழைத்துச் சென்று சேர்க்கின்றான்.  சேர்க்கப்பட்ட நண்பனை  அவனது இயக்கமே ஒரு கட்டத்தில் கொன்று விடுகின்றது. சிறுவன் தற்போது கனடாவில் வசிக்கின்றான். கொல்லப்பட்ட அவனது நண்பனின் தம்பியும் அண்ணன் கொல்லப்படக் காரணமாகவிருந்த சிறுவனைக் கொன்று பழி தீர்ப்பதற்காகக்  காத்திருக்கின்றான். இறுதியில் சிறுவனைக்கொல்ல பிஸ்டலுடன் கொல்லப்பட்டவனின் தம்பி வருகின்றான். அவனிடமிருந்து பிஸ்டலைத் திறமையாகப் பறித்தெடுத்த சிறுவன் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்துவிட்டு பிஸ்டலைக்கொடுத்து  நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறுகின்றான்.

Thursday, March 14, 2024

'மண்ணின் குரல்' - என் ஆரம்ப நாவல்களின் தொகுப்பு.

- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -

'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு.  குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள்.  இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது.  இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை  நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக  நூலுருப் பெற்றது.  மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது  , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்மையான மேதை!


இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14. வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது சிறப்புச் சார்பியற் கோட்பாடு. 

ஸ்டீபன் ஹார்கிங் : தப்பிப்பிழைத்தலில் வெற்றிகரமான போராளி!


நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (இவரது நினைவு தினம் மார்ச் 14)
 
ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று.

Monday, March 11, 2024

ஓவியர் சாண் சுந்தரம் (செல்வேந்திரா) !


யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர்.  தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.

இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்'  எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.

Wednesday, March 6, 2024

தொடர்நாவல்: மனக்கண் - அத்தியாயம் இரண்டு - அழைப்பு - அ.ந.கந்தசாமி -

- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - 

இரண்டாம் அத்தியாயம்: அழைப்பு
 

பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனா ♦ன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின்  வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.

   “எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!

Wednesday, February 28, 2024

எனது நூல்கள் வாசிப்புக்கு ....


    அண்மையில் வெளியான எனது மூன்று நூல்கள் தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும், ஏனையவற்றையும்  பதிவிறக்கி வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Tuesday, February 27, 2024

தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -


- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக,  சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில  உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -


ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;

1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

Monday, February 26, 2024

நாவல்: வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்'


ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  
 
 

 

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்


ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

கவிதைத் தொகுப்பு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் -


பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கல். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

Sunday, February 25, 2024

தொடர் நாவல்: மனக்கண் (1) - முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை! - அ.ந.கந்தசாமி -


- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். -


முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை

ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக..


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத் தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். 

எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நூல்கள் இணையத்தில்..

1. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதி...

பிரபலமான பதிவுகள்