நாடகவியலாளராக, கவிஞராக, சமூக,அரசியல் செயற்பாட்டாளராக, தேடகம் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அண்மைக்காலமாக முக்கியமான சிறுகதையாசிரியராகவும் உருமாறியிருக்கிறார். பா.அ.ஜயகரன் கதைகள், ஆலோ ஆலோ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும், அவனைக்கண்டீர்களா? என்னும் குறுநாவல் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள். அவனைக்கண்டீர்களா? தொகுப்பைக் குறுநாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பென்று கூறலாம். ஏனென்றால் சில கதைகள் சிறுகதைகள் போல் அமைந்துள்ளன.
எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா/" தொகுப்பிலுள்ள 'சந்தி - ஒரு கதைசொல்லியின் கதை', பற்றிய கருத்துகள் இவை. ஜயகரன் சிறந்த நாடகாசிரியர் என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணர முடிந்தது. மிகவும் இலகுவாக அவரால் இக்கதைகளைச் சிறந்த நாடகங்களாக மாற்றியமைக்க முடியும்.அதற்கேற்ப வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள், கதைக்களச் சூழல் விபரிப்புகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே நடையில் தென்படும் நகைச்சுவையும் என்னைக்கவர்ந்தது. மொழி நடை செறிவானது.