- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021) நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -
வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.
மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.
அடையாளம் குறித்த கதைகள்
அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.