Monday, July 15, 2024

இது பாட்டு கேட்கும் நேரம் : 'அன்புள்ள மான் விழியே. ஆசையில் ஓர் கடிதம்'


ஏ.வி.எம் தயாரிப்பான 'குழந்தையும் தெய்வமும்' சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேபி பத்மினியின் இரட்டை வேட நடிப்பு. The Parent Trap என்னும் அமெரிக்கத்திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஜேர்மன் நாவலான Lisa and Lottie என்னும் நாவலின் திரை வடிவம்தான் ' The Parent Trap'. கிருஷ்ணன்-பஞ்சுவின் (பஞ்சு அருணாசலமென்று தவறாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டிய நண்பர் கணேஷ்வரன் வீரகத்திக்கு நன்றி) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.

நண்பர்களுடன் ஒரு சந்திப்பு!


அண்மையில்  நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, குருபரன், யோக வளவன் ஆகியோருடன் டிம் ஹோர்டன் கோப்பிக் கடையொன்றில் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் உரையாடினோம். இலக்கியம், சமூக ஊடகம், அரசியல், பாடசாலை அனுபவங்கள் எனத்தொடங்கி தமிழகத்து டீ மாஸ்டர் வரை பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) , குருபரன் ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அறிமுகமான நண்பர்கள். யோக வளவன் எழுத்தாளர்களான வடகோவை வரதராஜன், அமரர் கோமகன் ஆகியோரின் சகோதரர். கனடாவில் அறிமுகமானவர். 
 
ஈஸ்வரமூர்த்தி, குருபரன் ஆகியோர் 84 காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ஈஸ்வரமூர்த்தி தான் பழகிய தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். யோக வளவன் கோமகன் நடத்திய 'நடு' இணைய இதழை மீண்டும் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
 
நண்பர்களுடனான சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சியைத் தருவன. இதுவும் அத்தகைய சந்திப்புகளில் ஒன்று.

சிவப்புச் சூரியன்!



அண்மையில் ஒரு மாலை  'ஸ்கார்பரோ டவுன் சென்டர்' சென்று திரும்புகையில் அந்தி வானில் சிவப்புச் சூரியனை அவதானித்தேன். அப்பொழுது இளைய மகளிடம் அதைப்புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.அப்போது எடுத்த புகைப்படம்.

வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!


காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.


 

கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..

Friday, July 12, 2024

கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -


இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
 
காணாமல் போன தன் போராளிக் கணவனை அல்லது காதலனை நினைத்து வாடுமொரு பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. காணாமல் போனவன் பகைவனுடன் மோதி போர்க்களத்தில் மாய்ந்தானோ அல்லது உட்பகையால், உடல் நலிவால் , இராணுவ முகாமில் மறைந்தானோ என்று விடை தெரியா வினாக்களுடன் துயரில் ஆழ்ந்திருக்கின்றாள் அவள்.
இக்கவிதை ஒரு விதத்தில் அக்காலகட்ட நிகழ்வுகளை, வேதனையினை ஆவணப்படுத்துக்கின்றது என்றும் கூறலாம்.

Thursday, July 11, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய  கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது  வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.

என் ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளும் வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில்  கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும்.  இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.

இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!


இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல்  வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை. 
 
 அக்காலகட்டத்தில் வெகுசனப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் கவிதையின் புது வடிவமான புதுக்கவிதையின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தியிருந்தன. வீரகேசரி தனது வாரவெளியீட்டில் 'உரைவீச்சு' ,சிந்தாமணி 'மணிக்கவிதை' , தினகரன் 'கவிதைச் சோலை' என்னும் பெயர்களில் இவ்வகைக் கவிதைகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன.

Wednesday, July 10, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



இங்கு எனது அண்மையில் முகநூலில் வெளியான கண்ணம்மாக் கவிதையின் சில வரிகளைச் செயற்கை நுண்ணறிவு எவ்விதம் கையாள்கின்றதென்பதைக் காட்டும் காணொளி இது. சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது. குறிப்பாக காலவெளிப்புள் என்பதில் வல்லினம் மிகும், அதில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது.
 
'பல்'லென்று முறுவலித்தாய் என்பதிலும் தடுமாற்றம் கண்டேன். வ.ந.கிரிதரனை வி.என்.கிரிதரன் என்று மாற்றியதிலும் தடுமாற்றம் கண்டேன். இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு உண்மையில் என்னைப் பிரமிக்க வைத்துத்தான் விட்டது. 
 
என் சொந்தக் குரலை விட தமிழகத் தமிழரின் 'டப்'பிங் குரலும் சுவைக்கத்தான் செய்கின்றது. மோகனுக்கு சுரேந்தர் என்றால் வி.என்.ஜிக்கு Hedra'வின் Ryan!
முழுக்கவிதை வரிகளும் கீழே:
 
கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - 
 
கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.

கவிதை: எழுக அதிமானுடா! - வ.ந.கிரிதரன் -


'எழுக அதிமானுடா!' என்னும் இக்கவிதையை எண்பதுகளில் என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். தாயகம் (கனடா) பத்திரிகையில் முதன் முதலில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் பிரசுரமானது. எனது 'எழுக அதிமானுடா' , 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்புகளிலும் வெளியானது. எண்பதுகளில் எழுதிய கவிதையின் வரிகளை அக்காலத் தோற்றத்தில் வாசித்தால் எப்படியிருக்கும்? இப்படியிருக்கும்.

எழுக அதிமானுடா!

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் கூறுவதென்ன?


ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் வெளி, நேரம் மற்றும் ஒளி வேகம்  பற்றிக் கூறுவதென்ன?

வெளி, நேரம் இரண்டும் சுயாதீனமானவை அல்ல. சுற்றிவர நிகழும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவை. சார்பானவை. இப்பிரபஞ்சத்தில் ஒளிவேகம் மட்டுமே சார்பற்ற ஒன்று. கால, வெளி இரண்டு பிரிக்கப்பட முடியாதவை. காலவெளி என்றே அவை எப்பொழுதும் இணைந்திருக்கும்.

கவிதை: எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய ‘ வேடங்கள்.

Tuesday, July 9, 2024

எந்தையும் நானும்!



என் தந்தையாரை நான் என் பதின்ம வயதுகளில் இழந்து விட்டேன். ஆனால் எழுத்து, வாசிப்பு ஆர்வத்துக்கு அடிகோலியவர் அவரே. அவருடன் கழிந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. குறிப்பாக இரவுகளில் குருமண்காட்டில் , வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடி இருப்பார். 
 
அப்பொழுதெல்லாம் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் அதில் படுத்திருந்தபடி இரவு வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பற்றி, வீழும் எரி நட்சத்திரங்கள் பற்றியெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பேன். அவற்றுக்கு அலுக்காமல், சளைக்காமல் அவரும் பதில் கூறுவார். எனக்கு வானியற்பியல் மீதான ஆர்வம் அப்போதிருந்து தொடங்கியது என்பேன்.

ஓவியம் பேசினால்...


நியூயோர்க் மாநகரத்து வீதி ஓவியர்  எண்பதுகளில் என்னைப்பார்த்து வரைந்த ஓவியம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவமொன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்கும் என்ற  கற்பனையின் விளைவு இது.

எழுத்தாளர் மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), எம் பால்ய பருவத்தில் இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்தது. அதனால் அவ்வாசிப்பனுபவம் இன்றும் எம் நினைவுகளில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கிறது,

Monday, July 8, 2024

நானே நானா? இது யாரோ தானா?


என் முகநூற் பதிவொன்றிலிருந்து சில வசனங்களை என் பதின்ம வயதில் கூறியிருந்தால், குரல் தவிர, எப்படியிருந்திருக்கும்?

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்


எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:
 
கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்
 
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

பாரதியார் நான் பேசுகின்றேன்!

பாரதியாரின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' கவிதையினை அவரே நம் முன் வந்து பாடினால் எப்படியிருக்கும்?


 

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான  அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.

இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது.  பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.

இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.

Friday, July 5, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.
அதற்கு நீ
'கொல்'லென்று நகைத்தாய்.
'பல்'லென்று முறுவலித்தாய்.
புள்ளென்றெனை அழைத்தாய்.
கள்ளா உனக்கென்ன துணிவென்றாய்.
கள்ளா என்றெனை அழைப்பதில்
கண்ணம்மா எனக்கும் சம்மதம்
என்றேன்.
ஏன் என்றாய்.
உள்ளங் கவர் கள்ளன் அதனால்
என்றேன்.
யார் உள்ளம் என்றாய்.
கண்ணம்மா,
உன் உள்ளம் என்றேன்.
மீண்டுமொரு
பல் தெரியக்
கொல்.  

Thursday, July 4, 2024

'இறைவன் என்றொரு கவிஞன். அவன் படைத்த கவிஞன் மனிதன்' - கவிஞர் கண்ணதாசன்

'ஏன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை - டி.ஆர்.பாப்பா. பாடியவர் - எஸ்.பி.பி. நடிப்பு - ரவிச்சந்திரன் & லட்சுமி.
 

இறைவனைக் கவிஞனாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். மகான்களை அக்கவிதைகளில் காவியங்கள் என்கின்றார். கவிஞரின் இக்கற்பனைச் சிறப்புக்காகவே எனக்குப் பிடித்த பாடலிது. பாடலுக்கு எஸ்.பி.பி.யின் குரலும், பாப்பாவின் இசையும், ரவிச்சந்திரனின் நிதானமான நடிப்பும் இப்பாடலின் மேலதிகச் சிறப்பம்சங்கள்.
 
'கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான். பெண்ணிடம் பிறந்ததை பெண்ணுக்கே அளித்தான்' என்னும் வரிகளை ரவிச்சந்திரன் பாடுகையில் லட்சுமி வெளிப்படுத்தும் நாணம் மறக்க முடியாதது.

கவிதை: ஜிம்மி - வ.ந.கிரிதரன் -


ஜிம்மி! முதலில் நினைவுக்கு வருவது
பபா வீட்டு ஞமலி!
பபா என் பால்ய காலத்து நண்பன்.
பபா பற்றி நினைத்ததும்
ஜிம்மி பற்றிய நினைவுகளும் வந்து விடும்.
உடும்பு
பிடிப்பதில் பிரியமும், வல்லமையும்
ஜிம்மிக்கு உண்டு.
எப்பொழுதும் பபாவின் முன்
வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும் ஜிம்மியின்
தோற்றம் இன்னும் நினைவில் மங்கிவிடவில்லை.
உடும்பின் ஈரலை அதன் மூக்கில் பபா பூசி விடுவான்.
அது ஒன்று போதும் ஜிம்மிக்கு.
காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஓடும்
ஜிம்மிக்குப் பின் நாமும் ஓடுவோம்.

Wednesday, July 3, 2024

கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -


வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன். 

நோக்கலில் இரக்கம்!

பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.

இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.

பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.

இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.

இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.

நெடுமழை!
கடுமழை!
அடைமழை!

மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!

வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.

girinav@gmail.com

நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more


girinav@gmail.com

Tuesday, July 2, 2024

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'


சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.

'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

Friday, June 28, 2024

கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -


- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர்  Kinga Surma திடீரென  ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -


நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.

நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.

எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன.  இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில்.  ]

2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.

என்னைக் கவர்ந்த அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'


ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.

அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.

அ.ந.க மார்க்சியத்தத்துவங்களின் அடிப்படையில் இயங்கிய சமூக,அரசியற் செயற்பாட்டாளரும் கூட. அதே சமயம் அவரது கவிதைகளில் இது போன்ற சிந்தனையாற்றலையும், தேடல்களையும் உள்ளடக்கிய கருத்துகளையும் காணலாம். இலங்கைத்தமிழ்க் கவிதைகள் மட்டுமல்ல உலகத்தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிலும் நிச்சயம் இடம் பெற வேண்டிய கவிதை இது.  

Thursday, June 27, 2024

குதிக்க வைக்கும் வான் கேலன் இசைக்குழுவின் 'குதி' (Jump)!


வான் கேலன் இசைக்குழுவைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவர்களது புகழ்பெற்ற 'Jump' பாடல்தான். குழுவின் பிரதான பாடகர், கிட்டார் கலைஞர் இவர்களுடன் ஏனைய இசைக் கலைஞர்களும் சிறப்பாக இணைந்து அப்பாடலை உருவாக்கியிருப்பார்கள். 
 
எண்பதுகளில் கனடா வந்த சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் என் மச்சான் குட்டியின் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தேன். அவனுடன் வேறு நண்பர்களும் தங்கியிருந்தார்கள். அவர்க்ளில் ஒருவன் அசோக். இவன தாய், தந்தையர் இருவரும் யாழ் வைத்தியசாலையில் குழந்தை நல வைத்தியர்களாகப் பணியாற்றியவர்கள். அவர்கள் Toyota காரொன்றில் திரிவதைக் கண்டிருக்கின்றேன். அறிந்திருக்கின்றேன். ஆனால் அசோக்கை நான் சந்தித்தது இங்குதான். ஆரம்பத்தில் பல்வேறு தொழில்களையும் செய்து தனது துறையான கணக்கியல் துறையில் உரிய சான்றிதழ்கள் பெற்று கனடிய அரச நிறுவனமொன்றில் பணியாற்றியவன். 

Tuesday, June 25, 2024

'கிட்டார்க் கடவுள்' எரிக் கிளாப்டனின் ' 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை')


எனது இசை பற்றிய பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பரும் , எழுத்தாளருமான ஜோர்ஜ்.இ.குருஷேவ் பிரபல 'கிட்டார்' கலைஞரும், பாடகருமான எரிக் கிளாப்டனின் 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') என்னும் பாடலுக்கான 'யு டியூப்' இணைப்பினைச் சுட்டிக்காட்டினார். டியூன், ரிதம், பீட் பற்றிய புரிதலுக்காக அவ்விணைப்பினைச் சுட்டிக் காட்டினார். அதற்காக அவருக்கு நன்றி. 
 
'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் ரேகே பாடகர் பாப் மார்லி. 

Monday, June 24, 2024

எனக்குப் பிடித்த கவிஞர் நீலாவணனின் 'விளக்கு'


ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணன். அவரைப்பற்றி நல்லதொரு சுருக்கமான கட்டுரை 'கிழக்கின் கவித்துவ ஆளுமை நீலாவணன்'. எழுதியவர் மோகனதாஸ். அதற்கான இணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கவிதைத்தொகுப்புகள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவரது 'விளக்கு' கவிதை எனக்கு பிடித்த கவிதைகளிலொன்று.  தினகரன் பத்திரிகையில்  31.5.69  அன்று வெளியான இக்கவிதை அவரது 'ஒத்திகை' கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது.  தொகுப்பு நூலகம் இணையத்தளத்திலுள்ளது. இணைப்பை இப்பதிவில் இறுதியில் தந்துள்ளேன். வாசிக்கவும்.

இருண்டு கிடக்கிறது வீடு. காடுகளூடு அலைந்து திரியும் கவிஞன் இருண்டிருக்கும் வீடு பற்றியும்  அதற்கு விளக்கேற்ற் வேண்டுமென்றும்  எண்ணித்திரும்புகின்றான்.  திரும்பியவன்  சாவி கொண்டு வீடு திறந்து உட்செல்கின்றான். உள்ளறையில் இருக்கும் தீப்பெட்டி எடுத்து விளகேற்றுகின்றான்.  'வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்' என்று தொடங்கும் கவிதை 'வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன் வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!' என்று முடிகின்றது.

இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே! சில கேள்விகள்!


இசை அறிஞர்களே! இசை பற்றி அறிந்த முகநூல் நண்பர்களே! இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே. உங்களிடம் சில கேள்விகள். நான் சுருதி, தாளம், Notes, Beats, சுரம் , இராகம் போன்றவற்றைப் பற்றி புரிந்துகொண்டிருப்பதை இங்கு எடுத்துக் கூறுவேன். அதில் தவறேதுமிருப்பின் அறியத்தாருங்கள்.
 
இசை நிகழ்ச்சிகளில் நடுவர்கள் எப்போதும் சுருதி பற்றிக் கூறுவார்கள். நான் புரிந்து கொண்ட அளவில் சுருதி அல்லது சந்தம் அல்லது ஆங்கிலத்தில் Rhythm அல்லது Tune இவையெல்லாம் ஒன்றே. இந்த என் புரிதல் தவறா?
சுருதி பிசகாமல் பாடுவது என்பது மேற்படி இசை அமைப்பாளர்கள் உருவாக்கிய சந்தம் அல்லது 'டியூனை' விளங்கி , அதற்கேற்பப் பாடுவது. இல்லையா?
 
ஆங்கிலத்தில் நோட்ஸ் என்பது சுரங்களே. 'பீட்' என்பது தாளமே.
இசை அமைப்பாளர்களின் டியூன் அல்லது சந்தம் , தாளாத்துக்கு அமைவாக இருக்கும். சுரங்களைக் கொண்டு உருவாகும் இராகங்களின் அடிப்படையில் அவை இருக்கும். பாடுபவர் தாளம் போட்டுக்கொண்டே பாடுவது அந்தச் சந்தம் அல்லது சுருதி விலகாமல் பாடுவதற்கே.

Sunday, June 23, 2024

'மரணத்துள் வாழ்வோம்' பற்றி...


தமிழ்க் கவிதைப் பரப்பில். குறிப்பாக இலங்கைத் தமிழ்க் கவிதைப்  பரப்பில் வெளியான முக்கியமான கவிதைத்தொகுப்பு 'மரணத்துள் வாழ்வோம்' . இதனைத் தொகுத்திருப்பவர்கள் மயிலங்கூடலூர் பி. நடராசன், இ.பத்மநாப ஐயர், அ.யேசுராசா & உ.சேரன்.  முதற் பதிப்பு 1985இல் 'தமிழியல்' வெளியீடாக இலங்கையிலும், இரண்டாவது பதிப்பு 1996இல் தமிழகத்தில் விடியல் பதிப்பக வெளியீடாகவும் வெளியானது.

நூலில் 31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ச்சூழற் காலத்தில் வெளியான கவிதைகள்  என்பதால் அரசியல் கவிதைகள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் போலும், இதில் எனக்கு உடன்பாடில்லை. இவை அரசியல் கவிதைகள் அல்ல. இவை போர்ச்சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகளை, இருப்பின் யதார்த்தத்தை, வலியினைப் பதிவு செய்யும் கவிதைகள். அரசியல் கவிதைகள் என்னும் சொற்பதம் இக்கவிதைகளைப் பற்றிய தவறான புரிதலை வாசிப்பவர்கள் உள்ளங்களில் ஏற்றிவிடக் கூடும். ஒரு வகையில் அரசியற் பிரச்சாரக் கவிதைகளோ என்று அவர்களை ஒரு கணமாவது , கவிதைகளை வாசிக்கும் வரையிலாவது சிந்திக்க வைத்து விடும் அபாயம் அச்சொற்பதத்தில் உண்டு. இது என் கருத்து. 

Friday, June 21, 2024

எழுத்தாளர் பா, ராகவனின் கூற்றொன்று பற்றி...


எழுத்தாளர் பா.ராகவன் பின்வரும் முகநூல் பதிவினை இட்டிருந்தார்: 
 
"கள்ளச்சாராய மரணங்களின் தொடர்ச்சியாகக் குடிகாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை சாகித்ய அகடமி, ஞானபீடம் போன்ற விருதுகளுடன் வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளனைவிட ஒரு சிறந்த குடிகாரன் குடும்பத்துக்கு நிறைய நல்லது செய்ய முடியும் போலிருக்கிறது."
 
உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் முகநூலில் சுட்டிக்காட்டிய பின்பே இதனை அறிந்தேன். எழுத்தாளர் ஒருவர் குறிப்பாகப் புனைகதை எழுத்தாளர் என்பவர் மானுடரின் அனைத்துப் பக்கங்களையும் நன்கறிந்தவராக இருப்பது அவசியம். ராகவனின் இக்கூற்று அவர் இவ்விதம் பரந்த மனப்பான்மையுடன் மானுடரை அணுகாமல் , குறுகிய பார்வையுடன் அணுகுகின்றாரோ என்று எண்ண வைக்கிறது. 

பாப் மார்லி: 'உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்'

ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும், 

Monday, June 17, 2024

தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil)


எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர்.
 
அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்).
தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.

Sunday, June 16, 2024

அப்பா!


அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து  குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன்  கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில்  அவரைப் பலர் 'Tall Nava' என்று  அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ்,  டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில்  இருந்தன.

கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.

Thursday, June 13, 2024

பேராசிரியர் சி.மெளனகுருவின் 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்'


எழுத்தாளர் ஜெயமோகனின் கேள்வி: "சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"
 
இதற்கான பதில்: ஆம்! பேராசிரியர் சி.மெளனகுரு 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்' என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதியுள்ளார். அது ஒரு விபவி வெளியீடு.

நுட்பம் (1980/1981): 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' - எம்.எஸ்.எம்.அனஸ்


" சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?" என்னும் எழுத்தாளர் அண்மையில் எழுப்பிய கேள்விக்கான பதிலொன்று: ஆம். எம்.எஸ.எம். அனஸ் 1981/1982இல் எழுதியிருக்கின்றார்.
 
பேராசிரியர் எதிரிவீர  சரத் சந்திரா பற்றிய எம்.எஸ்.எம்.அனஸின் கட்டுரையொன்று, 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' என்னும் தலைப்பில் நான் இதழாசிரியராகவிருந்த நுட்பம் சஞ்சிகையில் (!980/1981) பிரசுரமாகியுள்ளது.
 
கட்டுரை வெளியான நுட்பம் இதழுக்கான இணையத்தள முகவரி - https://noolaham.net/project/1049/104833/104833.pdf

Tuesday, June 11, 2024

எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!


"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு  மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள் ஆகிவிடுகின்றன. ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe)


Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?


Where both deliberate, the love is slight - காதல் சீர்தூக்கி, சிந்தித்துப் பார்த்து உருவாவதில்லை. அப்படி உருவானால்  the love is slight. அது முழுமையானதல்ல. 

Friday, June 7, 2024

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -


- பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் முருகபூபதியின் விமர்சனக் கட்டுரை. -

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI மனத்தை மயக்கும் இந்தநிலா! உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா. வந்தியத் தேவன் ...

பிரபலமான பதிவுகள்