தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ
மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும்
ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில்
எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம்.
நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை
ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும்,
'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள்.
அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின்
அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான
கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை
நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி
'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை.
சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக
இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து
ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை'
என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள்
உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள்
ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும்
இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம்.
பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக்
காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.
"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்.."
'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?
"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள்
வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு
அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே!
நினைக் காளியென்றேத்துவேன்.."
மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள்
கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி ,
அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப்
படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும்
காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று
ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற
பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை
நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....