|
- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி -
|
எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக் கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள் நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில் தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில் தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'. இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.
'காலநதி'யின் சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக் காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின் உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.