[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
ஏப்ரல் 2005 இதழ் 64
கனடா - 12வது அரங்காடல்!
நான் 98 இல் பார்த்த அரங்காடலைப்பற்றிய மனப்பதிவு மிகவும் அற்புதமாய் இருந்தது. இன்றும் அந்த உணர்வு தந்த பாதிப்பிலேயே அரங்காடல் பார்த்து வருகிறேன். நல்ல நாடகங்கள் நல்ல நடிப்பு எல்லாவற்றிலும் ஒரு முழுமையை பேணிய காலம் அது. இன்று மிகவும் மலிவான இரசனையை மக்களிடம் புகுத்தி பணம் பண்ணும் முயற்சியாகவே அரங்காடல் இருக்கிறது. நிறைய நடிகர்கள், பற்றாக்குறையின்றி நடிக்கும் நல்ல நடிகைகள் என்று முன்னோக்கி வந்த போதும். நல்ல தரமான நாடகப் பிரதியாளர்கள் இன்றி 'வெறும்' நாடகங்களாய் மட்டுமே ஆகி விட்டது. 1999 ஆம் ஆண்டில் 10க்கு மேற்பட்ட நடிகர் நடிகைகளைக் கொண்டு மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின் 'அன்னையிட்ட தீ' அப்போதைய அமைதியற்ற சூழலில், போரால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளை எடுத்து வந்து 'அன்னை இட்ட தீ', பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆட்கொண்டது. வழமையான பழமைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அது மீள்பிரதியாக்கம் செய்யப்பட்டபோது தனித்துவமாய் இருந்தது. 2005 இல் அரங்காடல் தன் பேரை மட்டுமே தன்னகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் குழந்தை சண்முகலிங்கத்தின் 'நரகோடு சுவர்க்கம்" என்ற நாடகம் மேடையேறியிருக்கிறது. அதை நான் பிரதியாய் வாசித்ததில்லை ஆதலால் நாடகத்தில் என்ன மாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. ஆனால் இன்றைய காலத்திற்குப் பொருந்தாமல் இடப்பெயர்வு செல் அடி போன்றவையை மேடையில் பார்த்தபோது, பார்வையாளர்களிடத்தில் சலிப்பைத்தான் காணமுடிந்தது. 'இந்த நேரத்தில் எதற்கிந்த நாடகம்' என்ற எரிச்சலைத் தவிர வேறெந்த உணர்வும் வரவில்லை. நாடகத்தில் இடம்பெயர்ந்துபோனவர்கள், திரும்பி வந்து தங்கள் வீட்டை வர்ணிக்கையில், 'எங்கட வீடு கற்பழிக்கப்பட்டிருந்தது' என்கையில் வீட்டைப் பெண்ணாக ஒப்பிட்டிருப்பார்கள். இந்த பழைய கற்புசார் மதீப்பீடுகள் கொண்ட இந்த வசனத்தை மீள்பிரதியாக்கம் செய்தவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், 'அரங்காடல்' போன்ற முற்போக்கின் பிரதிநிதிகளிடம், 'இவற்றை விமர்சிக்க வேண்டியிருக்கிறதே' என்பது அயர்ச்சி தருகிறது.
முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள். குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.
































