எனது ஓவியா பதிப்பகம் வெளியிட்ட 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி தன் கருத்தினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அவரது பதிவுக்கு நன்றி. அதனைக் கீழே தந்துள்ளேன். மேற்படி நாவலை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1139/113857/113857.pdf
எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவின் பதிவு கீழே;
'நவீன விக்கிரமாதித்தன்' என்ற இந்த நூலில் உரைநடையும் கவிதைகளும் இணைந்திருக்கின்றன. அவர் இதனை ஒரு நாவல் எனவகைப்படுத்துகிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்ற நூலை எப்படி நாவலா இல்லையா என விவாதிக்கலாமோ, அதேபோல இதனையும் விவாதிக்கலாம். ஆனால், அந்த விவாதங்களுள் நான் செல்லவிரும்பவில்லை. அ. முத்துலிங்கம் அவர்கள் அந்த நூலில் அவரின் சுயசரிதையைப் பதிய விரும்பிருக்கிறார் என்றால் இந்த நூலில் கிரிதரன் தனது லட்சிய/நிஜ வாழ்க்கைத்துணையைப் பற்றியும் அவரின் நண்பர்களைப் பற்றியும் அவரின் தேடல்கள் பற்றியும் பதிய விரும்பியிருக்கிறார் எனலாம்.