![]() |
- அஜீவன் (ஜீவன் பிரசாத்) - |
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
அண்மையில் மறைந்த பன்முக ஆளுமையாளரான அஜீவனின் 'எச்சில் போர்வை', 'நிழல் யுத்தம்' ஆகிய திரைப்படங்கள் பற்றி எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய இரு கட்டுரைகள்.
செப்டம்பர் 2003 இதழ் 45
அஜீவனின் 'எச்சில் போர்வை' குறும்படம் ஒரு பார்வை!
புலம்பெயர்ந்த உறவுகள் குறிப்பாக இளைஞர்கள் தாய்நிலத்தை மறந்து விட்டார்கள். தமது உறவுகளுக்குப் போதிய அளவு பணம் அனுப்புவதில்லை என்பது தாயக உறவுகளின் மனக்குறையும் புலம்பலும் என்றால், தாயக உறவுகள் கடிதம் போடுவதே பணத்துக்காகத்தான், எங்களை பணம் காய்க்கும் மரங்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்ற மனக்குறையுடன் புலம்புகிறது புலம் பெயர்ந்த இளைஞர் சமூகம்.
இங்கு நாம் யார் மீது குற்றம் சொல்வது? மகன் வெளிநாடு போய் விட்டான். இனி எமக்கென்ன குறை என்ற நினைப்போடு பணத்தை எதிர் பார்த்து, எதிர்பார்த்து, எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காத போது ஏமாந்து நின்ற பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் நொந்த உள்ளங்களின் மீதா, அல்லது உயிர்ப் பாதுகாப்பையும் அத்தோடு வசதியான வாழ்வையும் தேடி வந்து வதிவிட அனுமதி கூடக் கிடைக்காத நிலையில் இளமைக்கால வசந்தங்களைத் தொலைத்து விட்டு வெறும் பணம் தேடும் இயந்திரகளாகி விட்ட எமது புலம்பெயர் இளைஞர்களையா?