![]() |
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் - |
- ஜீவநதி சஞ்சிகையின் ஜூன் பதிப்பு ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் எனது கட்டுரை 'திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' நூல் பற்றிய சிந்தனைகள்! ' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. -
'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்' என்னும் ஈழக்கவியின் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஜீவநதி வெளியீடு. பேராசிரியரின் மொழியியல்ரீதியிலான பங்களிப்பை ஆராயும் நூல். உண்மையில் பேராசிரியர் எம்,ஏ.நுஃமானின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி எழுதும் பலரும் அவரது கவிதைப் பங்களிப்பு, திறனாய்வுப் பங்களிப்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி எழுதுவார்கள். பேராசிரியர் நுஃமானும் அவ்விடயங்களிலேயே அதிகமான கட்டுரைகளைப் பொது வாசகர்களுக்காக எழுதுவார். ஆனால் உண்மையில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழியியல் அறிஞரும் ஆவார். மொழியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைகக்ழகத்தில் பல வருடங்கள் பணி புரிந்தவர். ஆய்வரங்குகளில் மொழியியலில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இந்நிலையில் அவரது மொழியியற் சிந்தனைகள், ஆய்வுப் பங்களிப்புகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இக்கவனத்தைச் செலுத்துவதற்கான தூண்டலை ஈழக்கவியின் இந்நூல் செய்திருக்கின்றது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்க நூலாக இதனைக் கருதலாம்.
இந்நூல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பற்றிய நல்லதோர் அறிமுகத்தையும் , குறிப்பாக அவரது, குடும்பப் பின்னணி. கல்வித் தகைமைகள் , இலக்கியப் பங்களிப்புகள் (திறனாய்வு உட்பட), கல்விப் பங்களிப்பு ஆகியவற்றைச் சுருக்கமாக விபரிக்கும் . அதே சமயம் மொழியியல் அறிஞராக அவரது மொழியியல் துறைப்பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றது.