Tuesday, April 15, 2025
கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -
நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?
எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?
கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.
ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.
எழுத்தாளரும், நடிகருமான சோபாசக்தி மீதான பெண்ணிய அமைப்பின் அறிக்கை பற்றி...
'அதற்கமை பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective' வெளியிட்ட 'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை' அறிக்கை பார்த்தேன். அதன் கீழ் நன்கறியப்பட்ட ஆளுமையாளர்கள் பலர் கையொப்பமிட்டிருந்ததையும் பார்த்தேன். இவ்வறிக்கை பற்றிச் சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விவாதிப்பதையும் பார்க்கின்றென். பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective வெளியிட்ட 'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை - https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html
இது முக்கியமான பல குற்றச்சாட்டுகளை எழுத்தாளரும் , நடிகருமான சோபாசக்தி மீது முன் வைக்கும் அறிக்கை. அவர் சொன்னார், இவ்வறிக்கை பற்றிப் பலரும் தம் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். சிலர் இதிலுள்ள குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மைகளாக ஏற்றுக்கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்விதமாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அணுகும் மனப்பான்மை பல மனித உரிமை மீறல்களை உருவாக்க வல்லது. போராட்டக் காலத்தில் துரோகிகளாக்கப்பட்ட பலர் மீது, அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகளை நாம் அறிவோம்.
Sunday, April 13, 2025
கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக் கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை 15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது. எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
Friday, April 11, 2025
கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -
முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.
பலர் அற்ப ஆசைகளுக்குள்,
போலிப் பெருமைக்குள்,
மூழ்கிக் கிடப்பதையும் முகநூல்
முற்றாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
கோழைகள் அடையாளங்களை மறைத்து
வீரராக ஆட்டம் போடுகின்றார்கள்.
முகத்தைக் காட்டுவதற்கு அஞ்சும் கோழைகளை
முகநூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
நண்பர் என்ற போர்வையில் உலா வந்த பலரை
நட்பின் ஆழத்தைப் புரிய வைத்திருக்கின்றது
முகநூல்.
உள்ளே விடத்தையும்
வெளியில் இனிக்கும் புன்னகையையும்
காட்டும் நல்ல பாம்புகளையும்
முகநூல் சுட்டிக் காட்டியிருக்கின்றது.
கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.
தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'
எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான்.
புலமும், நிலமும் பற்றி..
"எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும்.
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
(இக்காட்சியினைப் பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைந்தது AI)
எழுத்தாளர் அருண் செல்லப்பா தன் முகநூற் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். "புலம் பெயர்தல் இதன் எதிர்ப் பதம் எதுவாக இருக்கும்.?"
இதற்கு நான் பதிலளித்திருந்தேன்: "புலம் திரும்புதல்."
புலம் மீளல் என்றும் கூறலாம்.
அதற்கு அவர் எதிர்வினையாற்றியிருந்தார் : "நான் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்;; எனவே கனடாதான் எனக்குப் புலம். இதன் மறுவளம் என்ன என்பதே கேள்வி."]
இதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்: 'புலம் என்றால் அர்த்தம் நிலம். தன் நிலத்தை விட்டுப் பெயர்தலே புலம் பெயர்தல். சங்கப் பாடல்களில் புலம் என்பது நிலம் என்னும் அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.'
அதனை ஏற்று அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்: "உண்மைதான். நில புலம் வைத்திருப்போர், நிலச் சுவாந்தார் என்று தமிழில் சொல்லாடல் வருகின்றது. எனவே எனக்குக் கனடா புலம் அல்ல. புரிகிறது;; நன்றி"
இவர் இவ்விதம் ஆரம்பத்தில் கேட்பதற்குக் காரணம் புலம் என்றால் அது நிலத்துக்கு எதிர் என்று கருதியதால்தான். பலர் அவ்வாறே கருதுவதை நான் அவதானித்திருக்கின்றேன். பலர் கட்டுரைகளில் கூட அவ்வாறே கருதிக் கையாண்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன்.
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.
இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.
இளைஞர்களே! சிந்திக்கச் சில சிந்தனைகள்!
இங்குள்ள காணொளியை முழுமையாகப் பார்க்கவும். இந்த இளைஞர் கள்ள வழியில் கனடா செல்ல முற்பட்டு அழைந்த இன்னல்களை, இழந்த சொத்துகளைப் பற்றி இதில் விபரிக்கின்றார். இவ்வகையில் இது பயனுள்ள காணொளி. காணொளிக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=q4Y5Z-JdscU
ஆனால் முடிவில் இவர் கூறுகின்றார் வெளிநாடு போவதானால் சட்டபூர்வமான வழிகளில் செல்லுங்கள் என்று. அது சரியானது. ஆனால் இவ்வளவு இன்னல்களை அடைந்த பின்னும் இவருக்கு வெளிநாடு செல்லும் ஆசை நீங்கவில்லை என்பதையும் அது புலப்படுத்துகிறது.
போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஒருவரின் இருப்பே கேள்விக்குரியதாக மாறிய சூழலில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். கிடைத்த வழிகளில் வெளியேறினார்கள். அச்சூழலின் விளைவு அது.
Thursday, April 10, 2025
ஸ்டார் வெளியிட்ட Brand New Planet சிறுவர் பத்திரிகை!
என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது.
Monday, March 31, 2025
தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு!
நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.
சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார். சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத் தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.
சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.
மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.
Tuesday, March 25, 2025
நடிகர் மனோஜ் மறைந்தார்!
முகநூல் எதிர்பாராத செய்திகளைத் தாங்கி வர ஒரு போதும் தவறுவதில்லை. அவ்விதம் இன்று முகநூல் தாங்கி வந்த செய்திதான் நடிகர் மனோஜின் மறைவுச் செய்தி. நான் இவரது தீவிர இரசிகன் அல்லன். உண்மையில் இவரது திரைப்படங்களைக்கூட இதுவரையில் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நான் இவர் நடித்த திரைப்படப்பாடல்களின் காணொளிகள் பலவற்றை அதிகமாகப் பார்த்திருக்கின்றேன். இரசித்துக்கொண்டிருப்பவன். குறிப்பாக இவரது 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படப்பாடல்கள் மிகவும் பிடித்தவை. குறிப்பாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் 'எங்கே அந்த வெண்ணிலா' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்பாடல்களில நடித்திருக்கும் மனோஜின் இயல்பான தோற்றம், நடிப்பு குறிப்பாக மனத்தைக் கவரும் அந்தப் புன்சிரிப்பு இவற்றினை நான் இரசிப்பவன்.
கதாநாயகனாக இவரால் ஏனைய திரைப்பட வாரிசுகளைப்போல் சுடர் விட முடியாமற் போயிருந்தாலும் , நடிகர் ரகுவரன் போல் தனித்துவம் மிக்க, குணச்சித்திர நடிகராக நிலைத்து நிற்கக் கூடிய ஒருவர் இவர் என்று நினைப்பதுண்டு.
நடிப்பு தவிரத் திரைப்பட இயக்கத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்னும் சாதிப்பதற்கு இவருக்குக் காலம் இருந்த நிலையில் ,இந்த வயதில் இவர் மறைந்திருப்பது துயரமானது. இருப்பின் நிலையற்ற தன்மையினை மீண்டுமொரு தடவை எமக்கு உணர்த்தி நிற்பது. ஆழ்ந்த இரங்கல்.
இவரது நினைவாக, இவர் நடிப்பில் என்னைக் கவர்ந்த சில பாடல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
எங்கே அந்த வெண்ணிலா - https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w
முதன் முதலாய் உன்னைப் பார்க்கிறேன் - https://www.youtube.com/watch?v=Cph4grc2l_U
சொல்லாதே சோலைக்கிளி - https://www.youtube.com/watch?v=rDzFFHdEoEA
எந்த நெஞ்சில் - https://www.youtube.com/watch?v=kg4uCisk_2Q
ஈச்சி எலுமிச்சி - https://www.youtube.com/watch?v=Iklj9CFFmEw
Monday, March 24, 2025
க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -
அமரர் க்ரியா ராமகிருஷ்ணனின் தமிழ்ப் பதிப்பகத்துறைக்கான பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. க்ரியா என்றால் தரம் என்னும்சொல் நினைவுக்கு வரும். தேர்தெடுத்த தரமான தமிழ் நூல்களை, ஏனைய மொழிகளில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டுடன் , க்ரியா பதிப்பகத்தின் அகராதித்துறைக்கான பங்களிப்பும் முக்கியத்துவம் மிக்கது. நூல்வெளியீடு, அகராதித் துறைப் பங்களிப்பு இவற்றுடன் இன்னுமொரு முக்கிய பங்களிப்புக்காகவும் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவு கூரப்படுகின்றார். நினைவு கூரப்பட வேண்டும். அது ரோஜா முத்தையா நூலகத்துகான அவரது பங்களிப்பு.
Thursday, March 20, 2025
நூல் அறிமுகம் - சார்பியல் தத்துவம் என்றால் என்ன?
லெ.லந்தாவு, யூ.ரூமர் என்னுமிருவர் எழுதிய ,சார்பியல் த்த்துவத்தின் முக்கிய அம்சமான சார்புத்தன்மையைப்பற்றிய , மிகவும் எளிமையாகச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும வகையில் எழுதப்பட்டுள்ள நூல் 'சார்பியல் தத்துவம் என்பது என்ன?' என்னும் இந்நூல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ரா.கிருஷ்னையா.
சார்பியல் தத்துவம் சிறப்புச் சார்பியல் தத்துவம், பொதுச் சார்பியல் தத்துவம், வெளி, நேரமாம் சார்பானவை, காலவெளி ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதது, புவியீர்ப்பு என்பது காலவெளியில் பொருளொன்றின் திணிவு ஏற்படுத்தும் கேத்திரகணித விளைவு போன்ற சார்பியல் தத்துவத்தின் முக்கிய அம்சங்களை இந்நூல் கவனத்தில் எடுக்காதது துரதிருஷ்ட்டமானது. அவற்றையும் உள்ளடக்கியிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்புடையதாகவிருந்திருக்கும்.
இருந்தாலும் மேலோட்டமாக அதே சமயம் எளிமையாகச் சார்பியல் தத்துவம் கூறும் சார்புத்தன்மையைப்பற்றி நூல் சாதாரண பொதுமக்களுக்கு விபரிக்கின்றது. வாசகர்கள் சாதாரணப் பொதுமக்கள் என்பதால் நூலாசிரியர்கள் சார்பியல் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களான, மேலே நான் குறிப்பிட்டவற்றைத்தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
நூலின் தொடக்கத்தில் வரும் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் இதனைக் கூறியவர்தான்.
Saturday, March 15, 2025
கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
Friday, March 14, 2025
அறிஞனே! நீ வாழி!
மானுட சிந்தனையாற்றலின் வலிமையினை உணர்த்தும் ஆளுமையாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அவரது காலம் வரை நிலவி வந்த வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள்.
Wednesday, March 12, 2025
எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரலுக்குரியவர் பாடகர் டி.எம்.எஸ்!
எம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமைகளில் தமிழ்ச் சினிமாப் பாடகர்களும் அடங்குவர். அவர்களில் டி.எம்.எஸ் முக்கியமானவர். அவரது குரலுடன் நாமும் வளர்ந்தோம். கனவுகள் கண்டோம். துயரத்தில் ஆழ்ந்தோம். மகிழ்ந்தோம். இன்பத்தில் ஆடினோம்.
Friday, March 7, 2025
மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!
நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல் மிகுல் டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.
இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.
டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.
நாவலின் கதை இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.
Thursday, March 6, 2025
சிறுகதை: ஒரு முடிவும் விடிவும் - வ.ந.கிரிதரன் -
மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் எழுதிய என் ஆரம்ப காலச் சிறுகதைகளிலொன்று இந்தச் சிறுகதை. தொண்ணூறுகளில் தாயகம் பத்திரிகையாக வெளியானபோது வெளியான சிறுகதை.
அக்காலகட்டத்தில் மணிவாணம் என்னும் பெயரில் மேலும் சில சிறுகதைகளும், 'கணங்களும், குணங்களும்' நாவலும் எழுதியிருந்தேன்.
*************************************************************************
மெல்லமெல்ல இருண்டு கொண்டிருக்கிறது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப் போன கதிரவன் பொங்கி எழுந்த காதலுடன் அடிவானைத்தழுவித் தன்னை மறந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது குளக்கரை, பறவைகள் கூட்டம் கூட்டமாய் தத்தமது உறைவிடங்கள் நாடிப்பறந்த வண்ணம் இருந்தன. இந்த நேரத்திலும் சில மீன் கொத்திகள் பேராசையுடன் இரைக்காக அருகில் உள்ள மரக்கொப்பொன்றில் காத்துக்கிடந்தன. அமைதியில்இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.
குளக்கரையில் மேட்டில் பரந்திருந்த புற்றக்கரையில் அலைந்து கொண்டிருந்த குழந்தையின் மேல் கையும் விரிந்திருந்தநீர்ப்பரப்பில் பார்வையுமாக யமுனா கூர்ந்த பார்வை. அகன்ற நெற்றி. அடர்ந்திருந்த கூந்தலைமுடிந்துவிட்டிருந்தாள்.
சாதாரணநாற்சேலையில் செக்கச்சிவந்த உடல்வாகு. எந்நேரமும் கனவு காணும் அந்த அழகான கண்களில். அந்தச் சோகம் படர்ந்திருந்தது.
Friday, February 28, 2025
அலெக்சாந்தர் புஷ்கினின் 'காப்டன் மகள்'
அலெக்சாந்தர் புஷ்கின் (அல்லது அலெக்சாந்தர் பூஷ்கின்) நவீன ருஷிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கவிதை, நாடகம், நாவலென இலக்கியத்தில் கால் பதித்தவர். இவரது புகழ்பெற்ற நாவலான 'காப்டன் மகள்' இவரது கடைசி நாவல். இதனை ராதுகா பதிப்பகம், மாஸ்கோ நா.தரமராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பிலும் 'காப்டன் மகள்'என்னும் பெயரில் கவிதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இங்கு நான் பகிர்ந்து கொள்வது இணையக் காப்பகத்திலுள்ளது. நா.தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியானது.
Wednesday, February 26, 2025
எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -
எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான
உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என்
படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா
ராமகிருஷ்ணன்.
இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய
உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில்
கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.
செயற்கை அறிவினை மானுடர்
ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை
எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google
NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast
சிறுகதைகள்:
கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s
நாவல்கள்
அமெரிக்கா (America) -
https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan
குடிவரவாளன் (An Immigrant) -
https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan
Tuesday, February 25, 2025
சிறுகதை: மான்ஹோல் - வ.ந.கிரிதரன்
கனடாவிலிருந்து வெளிவந்த 'தேடல்' சஞ்சிகையில் வெளியான எனது சிறுகதை 'மான்ஹோல்' . அச்சிறுகதையினை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்துள்ளார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன்.
மேற்படி சிறுகதையைப்பற்றி Google NotebookLM இன் செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் உரையாடுகின்றார்கள். அவ்வுரையாடலே இங்குள்ள காணொளி.
எனது யு டியூப் சானலான V.N.Giritharan Podcast இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளியிது.
சிறுகதையை வாசிக்க - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/manhole-v-n-giritharan-translation-by-latha-ramakrishnan/
Sunday, February 23, 2025
எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast'
Friday, February 21, 2025
கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'
உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' போன்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். கலைஞர் மு.கருணாநிதியின் 'ரோமாபுரிப்பாண்டியன்', 'வெள்ளிக்கிழமை' போன்ற புதினங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவரது சிலப்பதிகாரத்தை மையமாகக்கொண்ட நாடகத்தினை வாசித்திருக்கின்றேன். அவ்வப்போது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கின்றேன். பெரியாரின் நூல்களைப் பெரிதாக வாசித்திருக்காவிட்டாலும் அவரைப் பற்றிய அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் எழுத்துகளூடு அவரை அறிந்திருக்கின்றேன்.
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் 'நாம் தமிழர்' கட்சியினரின் பெரியார், திராவிடம்,கலைஞர் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரியாரின் எழுத்துகள், கலைஞரின் எழுத்துகள், அறிஞர் அண்ணா போன்ற ஏனையோரின் எழுத்துகள் பக்கம் என் கவனத்தைத் திருப்பின.
இவ்வகையில் கலைஞரின் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' யை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இன்று இவ்வளவு 'நாம் தமிழர்' கட்சியினரின் தூற்றுதல்களுக்கு உள்ளாகியிருக்கும் கலைஞரின் கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தது? எவ்விதம் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளில் ஒருவராக உருவானார் என்பதை அதன் மூலம் அறியலாம் என்று தோன்றியது. 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்களை உள்ளடக்கிய சுயசரிதை.
Tuesday, February 18, 2025
அறிஞர் அண்ணாவின் உரை: இந்தி இணைப்பு மொழியாக இருக்க முடியுமா?
Monday, February 17, 2025
ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி.....
| - ஆய்வாளர் மன்னர் மன்னன் - |
அண்மையில் யு டியூப் காணொளி ஒன்று பார்த்தேன். ஆய்வாளார் மன்னர் மன்னனுடையது. Saattai யு டியூப் சானலிலுள்ள நேர்காணல். இதனைத் தனது தர்க்கங்களுக்கு ஆதாரங்களாகக் காட்டும் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என் முகநூற் பதிவொன்றுக்கான எதிர்வினையாகப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=507VJQgMg68
சரி உதவிப் பேராசிரியர் பகிர்ந்திருக்கின்றாரே இவர் என்னதான் கூறுகின்றாரென்று பார்ப்போமே என்று பார்த்தேன். இதில் அவர் கூறிய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அவற்றைப் பட்டியலிடுகின்றேன்.
Saturday, February 15, 2025
பெரியார் என்னும் மகா மனிதர்!
பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..
அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்து வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.
சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கியது?
வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.
ஆதாரங்கள்!
அரசியல் ஆய்வாளர்
அவர்.
அவரது கூற்றுக்கு
ஆதாரம் வேண்டும் என்றேன்.
அதற்கு
ஆதாரமா
பாரிஸ் தமிழச்சியின்
யு டியூப் வீடியோ
பார்க்கவில்லையா என்றார்.
பரிதாபமாக வேறு என்னைப்
பார்த்தார்.
உதவிப் பேராசிரியர் ஒருவர்.
ஆதாரம் கேட்டேன்.
இரண்டு யு டியூப் காணொளிகள்
இவையயே சான்றுகள் என்றார்.
இனி இவர்கள்
AI பெரியார்
AI கலைஞர்
எல்லாரையும்
எடுத்து வருவார்கள்
ஆதாரங்களாக.
நாம் எங்கே போகின்றோம்?
Tuesday, February 11, 2025
ஏ தாழ்ந்த தமிழகமே!
அறிஞர் அண்ணா 1945இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தைத்திறந்து வைத்து ஆற்றிய உரை. இது 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா திறமையான பேச்சாளர். சிந்தனையாளர். ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடுகளாக, தர்க்கச் சிறப்பு மிக்கவையாக அவரது உரைகள் இருக்கும். 1947 தொடக்கம் 1967 வரை திமுக ஆட்சியை பிடிக்கும் வரையிலான காலகட்டம் தமிழகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் மத்தியில் முக்கியமான காலகட்டம் .
சம்த்துவம், சுயமரியாதை, சம்நீதி, பகுத்தறிவு இவற்றை மையமாகக் கொண்டு திமுக இயங்கியது. கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்த வேறொரு கட்சி திமுக போன்றேதும் உண்டா? தெரியவில்லை.
சினிமா, நாடகம், நாவல்ம் கட்டுரை என்று கலை, இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தம் கருத்துகளைப் பரப்பினார்கள். சினிமாவைப் பொறுத்த வரையில் திமுகவை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், உரைகளுக்கு பெரும்பங்குண்டு. எம்ஜிஆருக்கு முக்கிய பங்குண்டு. கலைஞரின் நாடகங்கள், பராசக்தி போன்ற திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
வரலாறு அறிவோம்: விவேகியின் 'ஐக்கிய திராவிடம் ' நூல் வெளிப்படுத்தும் பெரியார் பற்றிய விபரங்கள்.
ஐக்கிய திராவிடம் - விவேகி - யூலை 1947இல் வெளியான நூல். இதிலுள்ள கடைசி மூன்று அத்தியாயங்கள் பெரியார் ஈ.வெ.ரா, திராவிடக் கழகம், பிரிவினையும் ஐக்கியமும் முக்கியமானவை. வாசித்துப் பாருங்கள். ஜூல 1, 1947 நாளைத் திராவிடப் பிரிவினை நாளாகப் பெரியாரின் கட்டளைப்படி கொண்டாடியதை நூலின் மூலம் அறிய முடிகின்றது.
பெரியார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையை வெறுத்தார். கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக்கெதிராக நடந்த சத்தியாக்கிரகத்தில் மனைவி நாகம்மையுடன் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கின்றார்.
அப்பொழுது காங்கிரசில் இருந்த பெரியார், காங்கிரசில் நிலவிய ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக விலகி சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்துக் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கின்றார். அப்பொழுது குடியரசு பத்திரிகையை ஆரம்பித்து மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டுகின்றார்.
எகிப்தும், கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜேர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் , பிரெஞ்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றார். அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.
Monday, February 10, 2025
பெரியாரும் , தமிழ்த் தேசியமும், தமிழும் & திராவிடமும்
தமிழ்த் தேசியம் பற்றி 1938இலேயே பேசி விட்டார். அதற்காகப் போராடினார். இது வரலாறு. பெரியார் தமிழர் தலைவர் என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 1938, 1939 காலகட்டத்தில் பெரியார் எழுதியவற்றை உள்ளடக்கியுள்ள இங்குள்ள பக்கங்களைப் பாருங்கள். இவற்றைப் படிக்காமல் திராவிடம் பற்றியும், தமிழ் பற்றியும் கூக்குரல் இடாதீர்கள்.
Sunday, February 9, 2025
தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழியா?
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?
Friday, February 7, 2025
வ.ந.கிரிதரன் பாடல் : 'மக்கள் தலைவர் பெரியார்'
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
கேட்பதை அப்படியே நம்பாதே என்றார்.
கேட்பதை சிந்தித்து முடிவெடு என்றார்.
நாட்டு மக்களின் நலனுக்காய் வாழ்ந்தார்.
நாளும் பகலும் அயராது உழைத்தார்.
பகுத்தறிவுக் காவலன் பெரியார் புகழ்வார்.
பகுத்தறிவு அற்றோர் பெரியாரை இகழ்வார்.
Thursday, February 6, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - எரியும் உலகின் தீயை அணைப்போம்.
இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம் இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
Wednesday, February 5, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!
இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -
பதிவுகள் இணைய இதழில் வெளியான நந்திவர்மப் பல்லவனின் கட்டுரை.
ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -
தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.
இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.
ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள் தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.
2009இல் கலைஞரின் ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு வந்ததை வைத்து, கலைஞர் நினைத்திருந்தால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்றொரு கதையையும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அது மிகவும் தவறான கூற்று. நிச்சயம் கலைஞர் தலைமையிலான திமுக அரசு அல்ல இந்திய அரசின் வெளி விவாகரக் கொள்கையினைத் தீர்மானிப்பது. ஆளுநர் மூலம் எந்தக் கணத்திலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கில்லை என்பதைக் காரணம் காட்டிக் கலைப்பதற்கு இந்திய மத்திய அரசால் முடியும். அந்நிலையில் இவ்விதமான கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஈழத்தமிழர்களுக்காக திமுக, அதிமுக ஒன்றிணைந்து ஆதரவு வெளிப்படுத்தினார்கள். தன் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார் கலைஞர். அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கின்றது அவரது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினால்.
2009இல் யுத்தத்தை முடித்ததில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு முக்கிய பங்குண்டு. மகிந்த ராஹ்பக்சவே கூறியிருக்கின்றார் தான் இந்தியாவின் யுத்தத்தை நடத்தியதாக. உண்மையில் யுத்தம் அவ்விதம் முடிந்ததற்கு முக்கிய காரணம் ராஜிவ் காந்தி படுகொலை. அதன் எதிரொலிதான் யுத்தத்தின் அம்முடிவுக்குக் காரணம். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாகக் கலைஞரின் மீது சேற்றை வாரி இறைத்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் அதற்குப் பாவிப்பது இலங்கைத்தமிழரை. இதற்கு இலங்கைத் தமிழ் அமைப்புகள் சிலவும், குறிப்பாகப் புகலிடத்தில் செயற்படும் அமைப்புகளும் பலியாகியுள்ளன என்பது துரதிருஷ்டமானது. இலங்கைத்தமிழர்கள் தம் நிலையைத் தமிழக அரசியல் கட்சிகள் தம் நலன்களுக்காகப் பாவிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசியல் கட்சிகளின், தமிழக மக்களின் ஒன்றிணைந்த ஆதரவைச் சீர்குலைக்கும் எவற்றுக்கும் ஆதரவளிக்கக் கூடாது.
எழுபதுகளில் வெளியான சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகள் நூலகம் இணையத்தளத்திலுள்ளன. அவற்றை எடுத்துப் பாருங்கள். இலங்கைத்தமிழர்களின் உரிமைகளுக்கான திமுகவினரின் பங்களிப்பைத் தெளிவாகக் காணலாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் து பெரியார் பூமி. அறிஞர் அண்ணா பூமி. கலைஞர் பூமி,. எம்ஜிஆர் பூமி. இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களுக்கு ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள். அதுதான் ஈழந்த்தமிழர்களுக்குத்தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்.
இந்நிலையில் நாடு கடந்த தமீழீழ அரசின் சார்பில் வி,ருத்திரகுமாரன் பிரபாகரனையும், பெரியாரையும் இரு துருவங்களாக்கிக்கட்டமைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்யும் அரசியலை வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் பார்த்தேன். அது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர் அமைப்புகள் சீமான் தன் அரசியல் நல்னகளுகாக இலங்கைத் தமிழர்களைப் பாவிப்பதைக் கண்டிக்க வேண்டும். அனுமதிக்கக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்குத்தேவை தமிழகத்தமிழர்கள் அனைவரின் ஆதரவு மட்டுமே. அதற்கு ஊறு விளைவிக்கும் எதனையும் ஆதரிக்கக்கூடாது.
நன்றி : https://geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57/8959-2025-02-05-17-38-00
Tuesday, February 4, 2025
கவிதை பற்றிய உரையாடலொன்று...
கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.
கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.
அவரது கவிதை -
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.
ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.
Saturday, February 1, 2025
நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்ம பல்லவன் -
[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.]
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி
எழுகிறது. யார் தமிழர்? தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள்
தமிழர்களா? அல்லது அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத்
தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா? அப்படி
யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க
முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின் கலப்பு என்பதை இன்று
இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.
நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை,
தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன்
ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக்
காலம் தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள்.
பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள்.
இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக,
வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவ்விதம் வந்தவர்களின்
சந்ததியினர்தான் இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.
Friday, January 31, 2025
பெரியாரும் தமிழும் திராவிடமும்! சூழ்ச்சியால் மொழிவாரியாகச் சிதறுண்ட தென்னாடு. இன்றும் சூழ்ச்சி தொடர்கிறது தமிழ்நாட்டைப் பிரிக்க! - நந்திவர்ம பல்லவன்
[
பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில் (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.
அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார். கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.
மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார். அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார்.
Thursday, January 30, 2025
பெரியார் சிந்தனைகள் - தொகுப்புகள்! பதிப்பாசிரியர் - வே.ஆனைமுத்து! பதிப்பகம் - சிந்தனையாளர் கழகம்!
ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள்
ஈ.வெ.ரா பெரியார் பெரும் சிந்தனையாளர். வர்க்கம், வர்ணம், மூட நம்பிக்கைகளால் சிதைந்து கிடக்கும் உலகில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமநீதி, பெண் உரிமைகளுக்காக இருந்தவரை தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பிரமிப்பைத்தருகின்றன. அவரது சிந்தனையின் ஆழத்தைக் காட்டுகின்றன.
பெரியாரின் சிந்தனைகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் அவர் எழுத்துகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.அதற்குப்பின் அவற்றின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். அவற்றைப் படிக்காமல், அறியாமல் அவர் மீது சேற்றை வாரியிறைக்காதீர்கள்.
அழியாத கோலங்கள்: ஜீவபூமி (ராணிமுத்து) நினைவுகள்!
மானுடரின் வாசிப்பு அனுபவங்கள் பல படிகளைக்கொண்டவை. சிறுவர் இலக்கியம், வெகுசன இலக்கியம் (சரித்திர , சமூக, மர்ம நாவல்கள், காமிக்ஸ்) தீவிர இலக்க...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...









