'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, December 28, 2024
அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா.
அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா. பதிவுகள் இணைய இதழில் வெளியான இப்பதிவைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
முகநூலில் துணைப்பேராசிரியர் ஜே.பி.ஜோசபின் பாபா அவர்கள் (இப்பொழுது இவர் பேராசிரியராக இருக்கக் கூடும். விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்) அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்திருந்தார். அவை பற்றி நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களில் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு தருகின்றோம். உங்கள் கருத்துகளையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
Thursday, December 26, 2024
பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்!
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார்.
அஞ்சலி: எ.டி.வாசுதேவன் நாயர் (மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்)
என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய ஆளுமைகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர். இவரது 'காலம்' நாவல் எனக்கு மிகவும் பிடித்த பத்து நாவல்களில் ஒன்றாக எப்பொழுதுமிருக்கும். நடுத்தவர்க்கத்து மனிதன் ஒருவனின் பல்வேறு பருவ வாழ்க்கை அனுபவங்களை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, காதலையெல்லாம் நினைவு விபரிக்கும், நினைவு கூரும் நாவல். அவ்வப்போது எடுத்து வாசிக்கும் நாவல்களில் ஒன்று 'காலம்'.
Monday, December 23, 2024
கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!
நண்பர் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.
மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.
- தொகுப்பாளர் கே. பொன்னுத்துரை - |
நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில் வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன் அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் 'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Sunday, December 22, 2024
வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதையான 'நவீன விக்கிரமாதித்தனின் காலம்' கவிதை சிறு மாற்றங்களுடன் இங்கு பாடலாக , ரொக் இசை வடிவில்மேனாட்டு , கீழ்நாட்டு வாத்தியங்களின் கலவையில்
ஒலிக்கின்றது. சாத்தியமாக்கிய செயற்கை அறிவுக்கு என் நன்றி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது
உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.
Friday, December 13, 2024
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
Monday, December 9, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
Sunday, December 8, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!
உண்மை அன்பெனும் ஊற்று!
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.
Saturday, December 7, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்
இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத் தருமே.
எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்!
ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?" என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார்.
உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட முடியுமா?
Thursday, November 28, 2024
மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!
அழியாத கோலங்கள்: இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்'
எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாளர் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந் தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.
Wednesday, November 27, 2024
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நூல்கள் இணையத்தில்..
1. வ.ந.கிரிதரன் கட்டுரைகள்
ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113858/113858.pdf
2. 'நவீன விக்கிரமாதித்தன்' - நாவல்.
ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113857/113857.pdf
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - கவிதைத்தொகுப்பு
பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113856/113856.pdf
'நூலகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் கிண்டில் - அமேசன் மின்னூல்களாக வெளியிட்ட ஏனைய எனது நூல்கள்:
1. அமெரிக்கா (நாவல்) - https://noolaham.net/project/802/80111/80111.pdf
2. குடிவரவாளன் (நாவல்) - https://noolaham.net/project/865/86442/86442.pdf
3. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு) - https://noolaham.net/project/1049/104841/104841.pdf
4. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) - https://noolaham.net/project/20/1928/1928.pdf
5. மண்ணின் குரல் (ஆரம்ப நாவல்களின் தொகுப்பு) - https://noolaham.net/project/20/1927/1927.pdf
6. அமெரிக்கா (தொகுப்பு) - https://noolaham.net/project/20/1926/1926.pdf
7. வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 1 - யு டியூப் சானல் - https://noolaham.net/project/1175/117477/117477.pdf
8. 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' - https://noolaham.net/project/1207/120633/120633.pdf
9. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் தொகுதி 2 - https://noolaham.net/project/1207/120631/120631.pdf
10.. நவீனக் கட்டடக்கலைச் சிந்தனைகள் - https://noolaham.net/project/1207/120636/120636.pdf
11, இன்று புதிதாய்ப் பிறந்தேன் (வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 2 - யு டியூப் சானல்) - https://noolaham.net/project/1207/120632/120632.pdf
12, என்னை ஆட்கொண்ட மகாகவி - https://archive.org/details/2-1_20241125
13. அழியாத கோலங்கள் (பால்ய, பதின்ம வயது நனவிடை தோய்தல்) - https://archive.org/details/3-1_20241126
14. 14. அழியாத கோலங்கள் (தொகுப்பு 2) - https://archive.org/details/2-1_20241201
பதிவுகள் இணைய இதழ்
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ். https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
பதிவுகளுக்கு ஆக்கங்களையும், கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
Tuesday, November 26, 2024
வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!
அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Thursday, November 21, 2024
வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)
அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவுனியா அனுபவங்களையெல்லாம் விரும்பி வாசிப்பவன் நான்' என்றார். அப்பொழுதுதான் நானும் அது பற்றி யோசித்தேன். நான் முகநூலில், பதிவுகள் இணைய இதழில், என் வலைப்பதிவில் எல்லாம் என் பால்ய, பதின்ம வயது அனுபவங்களை எழுதுவது வழக்கம். என் பால்ய பதின்ம வயதுத்திரைப்பட அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களையெல்லாம் நிறைய எழுதியிருக்கின்றேன்.
மீண்டும் அவற்றை நோக்கியபோது ஒரு நூலாக்கும் அளவுக்கு எழுதியிருந்ததை உணர முடிந்தது. அவை அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் நல்லதோர் ஆவணமாக அதுவிருக்கும் என எனக்கும் தோன்றியது. அதன் விளைவே இந்த மின்னூல். மேலும் பல தொகுப்புகள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. சில பதிவுகள் , ஒன்றுக்கு மேற்பட்டவை, ஒரே விடயத்தைக் கூறுபவையாகவும் இருந்தாலும் அவற்றை நான் நீக்கவில்லை. எழுதப்பட்ட பதிவுகள் என்னும் அடிப்படையில் அவை அனைத்தையும் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளேன்.
அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது - https://www.amazon.com/dp/B0DNRLX984
நூலிலுள்ள கட்டுரைகள் வருமாறு:
'1. மகாகவி பாரதியார் நினைவாக.
2, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
3. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!
4. பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்
5. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி....
6. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான ‘வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்’ பற்றி......
7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்...
8. என்னை ஆட்கொண்ட மகாகவி!
9. பாரதியை நினைவு கூர்வோம்!
10.பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!
Wednesday, November 20, 2024
'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. பதிவுகள் மேலும் புதிய ஆக்கங்கள் பலவற்றுடன் வெளியாகியுள்ளது. பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
படைப்புகளையும் , கருத்துகளையும் ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.
சிறுகதை, கவிதை, இலக்கியம், ஆய்வு, நூல் அறிமுகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆக்கங்களை உள்ளடக்கிய பதிவுகள் இணைய இதழ் கணித்தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆரம்ப இணைய இதழ்களில் ஒன்று.
குரு அரவிந்தனின் கதைகள் பற்றி..
- எழுத்தாளர் குரு அரவித்நன் - |
'அடுத்த வீட்டுப் பையன்' - உயிர்நிழல் சிறுகதை. அடுத்த வீட்டுப் பையனின் அப்பா அவன் மனைவியான இன்னுமோர் ஆண் பற்றியது. முடிவில்தான் உண்மை தெரிகிறது. இரு கலாச்சாரங்களின் மோதல். வீடு திரும்புவனிடம் மகன் கேட்கின்றான் அடுத்த வீட்டுப்பையனின் அம்மாவைப் பார்த்தீர்களா? அம்மாவா? எப்படிச் சொல்வேன் என்பதுடன் கதை முடிகிறது.
இக்க்கதை இரு வேறு கலாச்சாரங்களின் பாதிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ஒருபாலினத்தவர்களுக்கிடையிலான மணம் என்பது மேனாடுகள் பலவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேனாட்டுக் கலாச்சாரம் இது கண்டு திகைக்கும் காலம் கடந்து விட்டது. ஆனால் இழந்த மண்ணில் நிலை அவ்வாறில்லை. இதனைத்தான் இக்கதையின் முடிவு எடுத்துரைக்கின்றது. கதையின் நாயகனைப்பொறுத்தவரையில் அடுத்த வீட்டுப் பையனின் அம்மா ஓர் ஆண் என்பதே அதிர்ச்சியைத்தருமொன்று. அது அவனது தாய்நாட்டுக் கலாச்சாரத்தின் விளைவு. அவன் வாழ்வதோ மேனாட்டுக் கலாச்சாரச் சூழல்.இதுபோன்ற திருமணத்தைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் சூழல்.கதாசிரியர் குருஅரவிந்தன் இக்கதையில் இருவிதக் கலாச்சாரப் பாதிப்புகளையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.
தமிழ்நதியின் 'மாயக்குதிரை'
- எழுத்தாளர் தமிழ்நதி - |
கலைவாணி ராஜகுமாரன் என்னும் கவிஞராக அறிமுகமாகித் தமிழ்நதியாக வளர்ந்த தமிழ்நதியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கவித்துவமான மொழியில் விரியும் இவரது புனைகதைகள் வாசிப்பதற்கு உவப்பானவை. இவருக்கென்று தமிழகத்தில் ஒரு வாசகர் கூட்டமே உண்டு.
இவரது மாயக்குதிரை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் மிக்கது. சூதாடும் பழக்கம் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தச்த்யேவ்ஸ்கியையும் விட்டு வைக்கவில்லை.
அகிலின் கூடுகள் சிதைந்தபோது...
- எழுத்தாளர் அகில் - |
போர்ச்சூழல் காரணமாகப் புகலிடம் நாடிய பலரின் வாழ்க்கையுடன் அப்போர் தந்த வலிகளும் புலம்பெயர்ந்திருக்கும். போர்ச்சூழலில் தன் மனைவியை இழந்த ஒருவன் அவன். வீதியில் வாகனமொன்றால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் குருவியொன்றை, அதன் வலியினை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் நிலை அவனது மனைவியின் மறைவை நினைவு படுத்துகிறது. புகலிட இலக்கியத்தின் , எழுத்துகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் பிறந்த மண் ஏற்படுத்திய, காலத்தினால் ஆற்ற முடியாத வலி சுமந்த உணர்வுகள். உளப்பாதிப்புகள்.
ஜோர்ஜ் இ.குருஷேவின் ' ஒரு துரோகியின் இறுதிக்கணம்'
- எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ் - |
'தேட'லில் வெளியானது. புகலிட இலக்கியத்தின் ஓரம்சம். புகலிடத்தில் வாழ்ந்தாலும், பிறந்த மண்ணின் தாக்கங்கள், வலி இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல முடிவதில்லை. ஜோர்ஜ்.இ.குருஷேவின் இக்கதையில் போராட்டச்சூழலில் விடுதலைக்காகப்போராடியவர்களால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன.
இவரது முக்கியமான ஆரம்பக் காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.
சுமதி ரூபனின் ' அமானுஷ்ய சாட்சியங்கள்'
- எழுத்தாளர் சுமதி ரூபன் - |
அக்கா
ஸ்பொன்சர் பண்ணிக் கனடா வரும் ஓரிளம் பெண் அவளது அக்கா குடும்பத்துடன்
தங்கியிருக்கின்றாள். அவளுக்கு அக்கா புருஷன் கொடுக்கும் பாலியல் ரியிலான
தொல்லைகளைச் சகித்துக்கொண்டு , தாய் தந்தையரும் வரும் வரையில் அக்காவுடன்
வாழ்கின்றாள். அவளது மனநிலையினை விபரிக்கும் கதை. அத்தான் என்றால்
அப்பழுக்கற்றவர் என்று எண்ணும் அக்கா. மாப்பிள்ளை தங்கம் என்று எண்ணும்
பெற்றோர். இவர்களுக்கு மத்தியில் அவள் மிகவும் இலகுவாகக் கனடாச் சட்ட
உதவியை நாடியிருக்கலாம். அப்படி நாடியிருந்தால் அவளது அக்கா புருசன்
சிறைக்குள் சென்றிருப்பான். அவள் ஏன் அவ்விதம் செய்யவில்லை?
ஶ்ரீரஞ்சனியின் 'காலநதி'
- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி - |
எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக் கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள் நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில் தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில் தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'. இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.
'காலநதி'யின் சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக் காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின் உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.
க.நவத்தின் 'சீருடை'
- எழுத்தாளர் க.நவம் - |
'டயஸ்போறா' இலக்கியத்தின் பல்வேறு பண்புகளை நவத்தின் இச்சிறுகதையில் காணலாம். ஊரில் பொறியியலாளரான செந்தில்நாதன் கனடாவில் பாதுகாவலாராக வேலை பார்க்கின்றார். அவர் வேலைக்குச் செல்கையில் கோர்ட் , சூட்டுடன் செல்வார். வேலைக்குச் சென்றபின்தான் பாதுகாவனுக்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார். தான் பாதுகாவலான வேலை செய்வதைக் குழந்தை கூட அறியாமல் மறைத்து வைப்பார். ஒரு நாள் வழியில் சந்திக்கும் ஊரில் அவனுக்குக் கீழ் ஊழியராகப் பணியாற்றிய ஒருவரின் மகன் லெக்ஷ்ஸ் காரில் வருகின்றான். அவருக்கு லிஃப்ட் கொடுக்கின்றான்.இங்கு அவன் செல்வச் செழிப்பில் கிளீனிங் கொம்பனி நடத்துகின்றான். அவனிடம் ஊரிலை கிடைக்காத படிக்கிற வசதி இங்கு கிடைத்திருக்கு என்று எகத்தாளமாகக் கூறுவார். பதிலுக்கு அவனும் படிச்சவையெல்லாரும் என்னத்தைக் கிழிச்சவையள் என்ற மாதிரி பதிலிறுப்பான். அத்துடன் இப்பவும் செக்கியூரிடி கார்ட் வேலையோ செய்கிறீர்கள் என்று கேட்பான். இது அவரது தன்மானத்தை எழுப்பிவிடவே காரை நிற்பாட்டும்படி கூறி இறங்கிவிடுவார்.
தேவகாந்தன் - ஊர் & சதுரக் கள்ளி
- எழுத்தாளர் தேவகாந்தன் - |
ஒரு காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும், ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின் ஊர் பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும் தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப் புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது. இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம் நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு. ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால் அது எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும் அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை விபரிக்கும் கதைதான் 'ஊர்'.
சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர் தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும் அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட பிணக்கு பற்றியும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து விட்டாலுமென்ற பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும், தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று திரும்புகின்றார்.
அ.முத்துலிங்கத்தின் 'புதுப்பெண்சாதி'
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்.,அவற்றின் பின்னணியில் கதைகள் எழுதியவர்,. இவ்விதம் அவர் திரிந்துகொண்டிருந்தபோதும் அவரால் பிறந்த மண்ணை மறக்கவே முடியவில்லை. ஊர் பற்றிய , அவரது நெஞ்சில் நிலைத்து விட்ட நினைவுகளையும் அவர் காவிச்சென்றார் என்பதைத்தான் அவரது பெரும்பாலான கதைகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு பொதுவான பண்பு. நினைவுகளைக் காவிச்செல்லும் ஒட்டகங்கள்தாம் புலம்பெயர் மனிதர்கள். அ.முத்துலிங்கமும் அதற்கு விதிவிலக்கானவர். ஊர் நினைவுகளை, ஊர் ஆளுமைகளை மையமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள் பல இதனைத்தான் புலப்படுத்துகின்றன. புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர் அல்லர் அவர். பணி நிமித்தம் புலம்பெயர்ந்தவர். ஆயினும் அவர் நிலத்தின் நிகழ்வுகள் அவரையும் பாதிக்கின்றன.அதன் விளைவுகள், பாதிப்புகள் அவர் கதைகள் பலவற்றில் தெரிகின்றன.
அவரது புதுப்பெண்சாதி - மறக்க முடியாத கதை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கத்தின் மிகச்சிறந்த கதையாக இதையே குறிப்பிடுவேன். கதை இதுதான். பத்மலோசனி என்னும் படித்தவள். கணிதம் ,ஆங்கிலம் எல்லாவற்றிலும் விருதுகள் வாங்கியவள். அழகானவள். அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. ஊரில் கடை வைத்திருக்கும் ராமநாதனுக்கு மனைவியாக வருகின்றாள், அன்றிலிருந்து அவள் ஊருக்கு ராமநாதனின் புதுப் பெண்சாதி என்பதைக்குறிக்கப் புதுப்பெண்சாதி என்றழைக்கப்படுகின்றாள். கணவனுக்குத் துணையாகக் கடையில் வேலை செய்கிறாள். அவளது பெயர் யாருக்கும் தெரியாது. புதுப்பெண்சாதி அம்மா, புதுப்பெண்சாதி அக்கா, புதுப்பெண்சாதி என்றே அழைக்கப்படுகின்றாள்.
மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்'
-எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் - |
மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக் கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்' - கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று இச்சிறுகதை,. கூர் 2011. ஆண்டிதழில் வெளியாகியுள்ளது.
நினைவில் நிற்கும் டானியல் ஜீவாவின் 'சந்தியா அப்பு'
- எழுத்தாளர் டானியல் ஜீவா - |
கனடாவில் வசிக்கும் டானியல் ஜீவா எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது சிறுகதைகளிலொன்றான சந்தியா அப்பு எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. புகலிடத்து எழுத்துகளில் காணப்படும் ஓரம்சம் கழிவிரக்கம். ஊரை விட்டு உயிர்தப்பப் புலம் பெயர்ந்தாலும், ஊர் பற்றிய நினைவுகள், அங்கு பழகிய மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், அங்கு அனுபவித்த வாழ்வின் நிகழ்வுகள் இவையெல்லாம் தொடர்ந்தும் நினைவில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து வரும். நினைவை வாட்டிக்கொண்டேயிருக்கும். இவ்விதமான ஓர் ஆளுமைதான் கதை சொல்லியைப்பொறுத்தவரையில் சந்தியா அப்புவும். கதை சொல்லியும் ஒரு கடற்றொழிலாளிதான்.
இக்கதையினைக் கதைசொல்லியூடு விபரிக்கும் கதாசிரியர் எடுத்திருக்கும் கதைச்சூழல் இழந்த மண்ணில் நிலவிய சூழல். அச்சூழலில் வாழ்ந்த கதா பாத்திரங்கள். இதற்குரிய காரணங்களில் ஒன்று ஏற்கனவே கூறியிருப்பதுபோல் இழந்த மண் பற்றிய நினைவுகள், கழிவிரக்கம்தாம்.
பா.அ.ஜயகரனின் சிந்திக்க வைக்கும் 'சந்தி'
நாடகவியலாளராக, கவிஞராக, சமூக,அரசியல் செயற்பாட்டாளராக, தேடகம் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அண்மைக்காலமாக முக்கியமான சிறுகதையாசிரியராகவும் உருமாறியிருக்கிறார். பா.அ.ஜயகரன் கதைகள், ஆலோ ஆலோ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும், அவனைக்கண்டீர்களா? என்னும் குறுநாவல் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள். அவனைக்கண்டீர்களா? தொகுப்பைக் குறுநாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பென்று கூறலாம். ஏனென்றால் சில கதைகள் சிறுகதைகள் போல் அமைந்துள்ளன.
எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா/" தொகுப்பிலுள்ள 'சந்தி - ஒரு கதைசொல்லியின் கதை', பற்றிய கருத்துகள் இவை. ஜயகரன் சிறந்த நாடகாசிரியர் என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணர முடிந்தது. மிகவும் இலகுவாக அவரால் இக்கதைகளைச் சிறந்த நாடகங்களாக மாற்றியமைக்க முடியும்.அதற்கேற்ப வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள், கதைக்களச் சூழல் விபரிப்புகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே நடையில் தென்படும் நகைச்சுவையும் என்னைக்கவர்ந்தது. மொழி நடை செறிவானது.
டானியல் அன்ரனியின் 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'.
- டானியல் அன்ரனி - |
'டானியல் அன்ரனி' எழுத்தாளர் டானியல் அன்ரனியின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு.ம் கருப்புப் பிரதிகள் வெளியீடாகக் கடந்த ஆண்டு வெளியான தொகுப்பு. இத்தொகுப்பின் முதற் கதை 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'. தொகுப்பின் முதற் கதை மட்டுமல்ல, முக்கியமான கதையும் கூடத்தான். இக்கதை ஏற்கனவே சமர் இலக்கிய வட்ட வெளியீடான 'வலை' சிறுகதைத்தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. 'வலை' தொகுப்பின் இரண்டாம் பதிப்பு சுரபி பதிப்பக வெளியீடாக வெளியானது. வலையில் வெளியான கதைகளுடன், கவிதைகள் , கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டு வெளியான தொகுப்பே கருப்புப் பிரதிகள் வெளியிட்ட 'டானியல் அன்ரனி' தொகுப்பு.
கதை சம்மாட்டியார் சவிரிமுத்தர், அவரிடம் வேலை பார்க்கும் மலையகத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை உள்ளடக்கிப் பின்னப்பட்ட கதை. கதையின் ஆரம்பத்தில் சவிரிமுத்தர் வீடு நோக்கி வருகின்றார். வரும் வழியில் பெருமாளைப் பொலிஸார் ஜீப்பில் ஏற்றிச் செல்வதைக் காணகின்றார். கதையின் இறுதியில் அதற்கான காரணம் மறைமுகமாக வெளிப்படுகின்றது.
வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய குறிப்பொன்று!
எனது ஓவியா பதிப்பகம் வெளியிட்ட 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி தன் கருத்தினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அவரது பதிவுக்கு நன்றி. அதனைக் கீழே தந்துள்ளேன். மேற்படி நாவலை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1139/113857/113857.pdf
எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவின் பதிவு கீழே;
'நவீன விக்கிரமாதித்தன்' என்ற இந்த நூலில் உரைநடையும் கவிதைகளும் இணைந்திருக்கின்றன. அவர் இதனை ஒரு நாவல் எனவகைப்படுத்துகிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்ற நூலை எப்படி நாவலா இல்லையா என விவாதிக்கலாமோ, அதேபோல இதனையும் விவாதிக்கலாம். ஆனால், அந்த விவாதங்களுள் நான் செல்லவிரும்பவில்லை. அ. முத்துலிங்கம் அவர்கள் அந்த நூலில் அவரின் சுயசரிதையைப் பதிய விரும்பிருக்கிறார் என்றால் இந்த நூலில் கிரிதரன் தனது லட்சிய/நிஜ வாழ்க்கைத்துணையைப் பற்றியும் அவரின் நண்பர்களைப் பற்றியும் அவரின் தேடல்கள் பற்றியும் பதிய விரும்பியிருக்கிறார் எனலாம்.
கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -
எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
மனங்கொத்தியின் கொத்தல்கள்: கலைச்செல்வன் பற்றிய நினைவுகள்!
-எழுத்தாளர் கலைச்செல்வன் - |
கவிஞர் வாசுதேவனின் 'தொலைவில்' கவிதைத்தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு கவிதை கண்ணில் பட்டது, கவிதையின் தலைப்பு 'உயிர்நிழல்'. கவிதையை வாசித்தபோது அது 'உயிர்நிழல்' கலைச்செல்வனைப் பற்றியது என்பதை அறிய முடிந்தது.
'சத்தமிட்டுச் சிரித்து
புயலைப்போல் சினந்து
ஆழங்களில் அமிழ்ந்து
உச்சிகளில் தாவி நீ செய்யும்
உன்னத மாயவித்தைகள்
அவற்றின் உச்ச நிலைகளில்
அமைதியுற்று
உன் உதடுகளிலிருந்து
புகையாய்ப் போயின.
ஆவேசத்துடன் ஆர்ப்பரித்த் நீ
அடைய முடியாததன் முன்னால்
கூற முடியாததன் கொடூரத்தின் முன்னால்
கூற்றுகளுக்கப்பாற்பட்டவை முன்னால்
குழந்தையாய் நின்றாய்.'
கவிஞரின் மேற்படி வரிகள் கலைச்செல்வனின் ஆளுமையைச் சிறப்பாக விபரிக்கின்றன. கவிதையின் வரிகள் அவரது கலைச்செல்வனுடான நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவன. இக்கவிதை வரிகள் எனக்குக் கலைச்செல்வனைப் பற்றிய நினைவுகளைச் சிறகடிக்கச் செய்து விட்டன. கவிதைத் தொகுப்பின் இன்னுமொரு கவிதை 'மனமெனும் மரங்கொத்தி' சிறப்பான உவமை. படிமம். தலைப்பை 'மனமெனும் மரங்கொத்தி' என்று உவமையாக வைத்திருப்பதற்குப் பதிலாக 'மனங்கொத்தி' என உருவகமாக வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். என் மனங்கொத்தியையும் இக்கவிதைகள் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைக்கொத்தியெடுக்க வைத்துவிட்டன.
Tuesday, November 12, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்
இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI
காலவெளிக் குழந்தைகள் நாம்
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்ளல்
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிதல் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
Thursday, November 7, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
Wednesday, November 6, 2024
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.. - வ.ந.கிரிதரன் -
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட முடியவில்லை. -
1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...
இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர். இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).
Wednesday, October 30, 2024
மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள்: 'Modern Tamil Poetry - A Miniature canavas ' (1 & 2)
கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்,கவியரசன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'! - கவிதைத்தொகுப்பு!
இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.
எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதிய...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...