நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;
"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."
தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.