- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'. எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். -
இரண்டாம் அத்தியாயம்: அழைப்பு
“எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!