[பதிவுகள் இணைய இதழில் ஆரம்பித்திருக்கும் புதிய நாவலின் முதல் அத்தியாயம். ஏற்கனவே வெளியாகி , நூலுருப்பெற்ற 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் இரண்டாம் பகுதி.]
ஓவியம் AI
அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!
இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம் எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்? இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை. சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை.
கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்?
இவ்விதமான சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத் தட்டினாள். அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.