[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் யூலை 2004 இதழ் 55
எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புலகம்!
ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது.
கூட்டத்தில் மா.அரங்கநாதனின் படைப்புலகம் பற்றியும், அவருடைய 'மூன்றில்' சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கியப் போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு.க.நா.சு ஆசிரியராக இயங்கினார். 'மூன்றில்' சார்பில் நடத்தப்பட்ட மூன்றூ நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'First of Kind' என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயற்படாமல், ஒரு சிறு பத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. கோபிக்கிருஷ்ணனின் 'சமூகப்பணி- அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி' மற்றும் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அழுவலகம் இலக்கியவாதிகள் இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்றால் மிகையாகது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் நினைவு கூர்ந்தார்கள்.