அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!
இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
கட்டடக்காட்டு
விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப்
பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு
பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு
பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில்
'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால்
வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம
வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின்
இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி,
இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும்
பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம்
தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப்
பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை
மறந்திருக்கின்றேன்.