- தாயகம் (கனடா) சஞ்சிகையாக வடிவமெடுத்தபோது அதில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று. பின்னர் ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது -
பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.