நண்பர் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.
மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.
- தொகுப்பாளர் கே. பொன்னுத்துரை - |
நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில் வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன் அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் 'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.