அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!
என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும் , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன். அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.
ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் எல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.
"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"
எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.
"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"
"உன் மனத்திலை இருக்கிறதைக் கண்டு பிடிக்கும் சக்தியெல்லாம் எனக்க்கில்லை கண்ணா. பேசாமல் நீயே சொல்லிவிடு."
"இல்லை. உனக்கு ஒரு துப்பு தருகின்றேன். அதிலிருந்து கண்டு பிடித்துக்கொள். இது ஒரு மிருகம்."
"மிருகமா? " என்று கூறிவிட்டு ஒருமுறை கலகலவென்று சிரித்தாள் மனோரஞ்சிதம்.
"மிருகமென்றால் மிகவும் இலகுவானதாச்சே. உனக்கு மிகவும் பிடித்த மிருகம், பறவையக் கண்டு பிடிப்பது அவ்வளவின்றும் கஷ்ட்டமானதல்ல கண்ணா."
இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள் :" நீ குறிப்பிடும் மிருகம் இந்தியாவில் ராஜஸ்தானில் காணப்படும் ஒன்றா?" கூறியவள் கண்களையும் சிமிட்டினாள்.
"ஏன் கண்ணம்மா சுற்றி வளைப்பு. நீதானே கண்டுபிடித்து விட்டாயே. பேசாமல் மிருகத்தின் பெயரையே கூறுவதுதானே."
அதற்கு மனோரஞ்சிதம் அருகில் ஓட்டும் வகையில் வந்து "ஓட்டட்டுமா. இந்த ஒட்டகத்துடன் ஒட்டட்டுமா" என்று என் மீது தன் உடலால் பலமாக இடித்தாள்.
அவளது மென்னுடல் பட்டு என்னுடல் ஒரு கணம் சிலிர்த்தது.