அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம். நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர், தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.
இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது.