"என்ன கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.
"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும் எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "
வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத் திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, March 7, 2023
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -
Saturday, March 4, 2023
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -
- எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில் இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர். தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால் எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.
தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம். அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு செய்யப்பட வேண்டிய கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் வெளியிட்ட நூல். 'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக மனக்கண் (நாவல்) , எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) & நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.
Monday, February 20, 2023
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (21) - பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்! - வ.ந.கிரிதரன் -
"என்ன கண்ணா, அப்படியென்ன டிவியிலை போய்க்கொண்டிருக்கு நீ ஆர்வமாய்ப் பார்க்கிறதுக்கு" என்று கூறியபடி வந்தாள் மனோரஞ்சிதம். வந்தவள் அருகில் நெருங்கி அணைத்தாள்.
"காட்டுயிர்களைப் பற்றிய காணொளியொன்று கண்ணம்மா. தப்பிப்பிழைத்தலுக்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்பதை விபரிக்கும் காணொளி. பார்ப்பதற்குக் கொடூரமான காட்சிகளைக்கொண்டது. நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய்விடு கண்ணம்மா" என்றேன்.
"கண்ணா, நான் இது போன்ற பல 'டொக்குமென்ரி'களைப் பார்த்திருக்கின்றேன். என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள முடியும். கொடூரமானவைதாம். ஆனால் இருப்பு இப்படித்தானே இருக்கிறது கண்ணா"
"கண்ணம்மா, நீ கூறுவதும் சரிதான். எனக்கு இதனைப் பார்க்கையில் பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."
Monday, February 6, 2023
வெங்கட் சாமிநாதனும் கலை மற்றும் மார்க்சியம் பற்றிய அவர்தம் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -
- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -
அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். இறுதி வரை 'பதிவுக'ளில் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது கலை மற்றும் மார்க்சியம் பற்றிய எண்ணங்களை அவரது எழுத்துகளூடு விபரிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்''; பக்கம் 36) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்பிடும் கலை, இலக்கிய விமர்சகர் அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார்.
ஆய்வு: கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதனும் இருப்பு பற்றிய அவரது பார்வையும்!.. - வ.ந.கிரிதரன் -
- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -
'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையினைப் பேராசிரியர் நா.வானமாமலை தனது 'ஆராய்ச்சி' என்னும் காலாண்டுப் பத்திரிகையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள் பற்றியதாக எழுதியதற்குப் பதிலடியாக வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலிற்குப் பதில் விமர்சனமாக வெ.சா. 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்றொரு நீண்ட கட்டுரையினை , 'நடை' சஞ்சிகையில் தொடராக எழுதியிருந்தார். வெ.சா.வின் நீண்ட அக்கட்டுரைக்கு எதிரொலியாக நீண்டதொரு கட்டுரையொன்றினைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதியிருந்தார். அது பின்னர் அவரது 'மார்க்சியத் திறனாய்வும், இலக்கியமும்' என்னும் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அதிலவர் வெ.சா. தனது 'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையில் 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று குறிப்பிட்டிருப்பார். அதனைத் தனது கட்டுரையில் நுஃமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
Tuesday, January 31, 2023
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல் விருதுகள்!
1. வ.ந.கிரிதரனின் மின்னூல்கள் - அமேசன் - கிண்டில் பதிப்புகளாக
2. ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள்.காம் படைப்புகள் சில
Saturday, January 28, 2023
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (20) - கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இருபது: கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை!
"என்ன கண்ணா?" என்றவாறு என்னைத் தன் ஓரக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தாள் மனோரஞ்சிதம்.
"இது நானுனக்குச் சமர்ப்பிக்கும் சொல் மாலை."
"என்ன கண்ணா இது. சொல் மாலையா? எனக்கா? ஏன்? ஏன் இப்போ?"
"கண்ணம்மா, இப்போ இல்லையென்றால் எப்போ? அதுதான் இப்போ."
"சரி,சரி கண்ணா. அதுதான் உன் விருப்பமென்றால் தாராளமாகச் சமர்ப்பி உன் சொல் மாலையை. மாலையை எங்கே சமர்ப்பிக்கப்போகிறாய்? இதுதான் மலர் மாலை அல்லவே கண்ணா. அது சரி ஒரு கேள்வி."
"கேள்வியா? என்ன கேள்வி கண்ணம்மா. கேள்வி இல்லாமல் இருப்பில் எதுவுமில்லை. கேளு கண்ணம்மா."
"கண்ணா, இவ்விதமான சமர்ப்பணத்துக்கு நான் அப்படியென்ன செய்து விட்டேன். "
"கண்ணம்மா, நீ செய்தவற்றைப் பட்டியலிடுவேன். கேள். "
"அப்படியா? சரி. சரி. பட்டியலிடு என் கண்ணா. பார்ப்போம் உன் பட்டியலை"
வழக்கம்போம் அவள் குரலில் தொனித்த குறும்பு கலந்த தொனியை அவதானித்தேன்.
நான் தொடர்ந்தேன்:
"முதன் முதலாக என் குடும்பத்தவர் அல்லாத ஒருவரிடம் நான் அன்பு கொண்டது உன்னிடம்தான். அதற்காக உனக்கு நிச்சயம் நன்றி கூற வேண்டும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான் கண்ணம்மா."
Thursday, January 19, 2023
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு... - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...
நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள் மனோரஞ்சிதம்.
விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.
விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும். இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது. அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்.
Monday, January 16, 2023
அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - முனைவர் சு. குணேஸ்வரன் -
- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021) நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -
வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.
மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.
அடையாளம் குறித்த கதைகள்
அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.
Thursday, January 12, 2023
சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! - வ.ந.கிரிதரன் -
அளவில் சிறியதான இந்த நாவல் கிடைத்ததுமே முதலில் வாசித்தேன். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கும் நாவல், முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
சிறிய நாவலில் இயற்கையுடன் ஒன்றிய மானுட வாழ்வு எவ்விதம் பல்வகை இடர்களுக்குள்ளாகிறது என்பதை நெஞ்சைத்தொடும் வகையில் ,அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்படுகின்றது. பாசம், காதல் போன்ற மானுட உணர்வுகளையெல்லாம் போர் எவ்விதம் சிதைத்து விடுகின்றது.
Saturday, January 7, 2023
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (18) - தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!
என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?""பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"
"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"
"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள். இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா? இவ்வகையான தளைகள் அனைத்திலுமிருந்து விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"
Sunday, December 25, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!
"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?" திடீரென நான் கேட்கவே மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.
"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள். அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.
"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"
"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"
'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"
Friday, December 16, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில.
மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று. அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்டு வாசித்துக்கொண்டிருந்தாள்."கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"
"கண்ணா, என் கண்ணனின் குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."
சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:
"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."
Sunday, December 11, 2022
ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந்தது. அதற்கான முகவரி: https://www.msuniv.ac.in/images/academic/PhD/English.pdf
பதினைந்து பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டின் பக்கம் பதின்மூன்றே என் கவனத்தை ஈர்த்த பக்கம். அது புகலிடக் கற்கைநெறிகளைப்பற்றியது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலிரு பகுதிகளில் புகலிடக்கற்கை நெறி பற்றிய கொள்கை விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம். என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.
சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள், இயற்கை , எழுத்து , பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர் பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை வெளிப்படும் வரிகள்.
தமிழ் இலக்கிய உலகில் என்னைப்
பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார். தன் குறுகிய காலத்தில்
இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.
எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக, தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.
ஒரு கடிதம்!
அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு; என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட ஆய்வு செய்வதாகவும், அமெரிக்கன் கல்லூரியில் எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார். மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.
Friday, December 9, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 15 - கண்ணம்மா எழுதிய கவிதை!
"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."
மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்."கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.
"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "
"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"
"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"
"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கணமணி."
"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"
"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."
"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல் முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."
'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும். ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."
"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி."
"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"
"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"
Friday, December 2, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 14 - யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
"கண்ணா என்ன மீண்டும் பலமான சிந்தனை?"
திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா, மனோரஞ்சிதம்.
"சங்ககாலப் புலவன் ஒருவனின் சிந்தனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன் கண்ணம்மா. அவனது அனுபவத்தெளிவு மிகுந்த சிந்தனையின் வீச்சு என்னை எப்போதும் கவருமொன்று. அன்று அவன் சிந்தித்ததை இன்றுள்ள மனிதர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், உலகம் எவ்விதம் ஒரு குடும்பம் போல் இன்பத்தில் மூழ்கி இனித்திருக்குமென்று எண்ணிகொண்டிருந்தேனடி. என் சிந்தனையை வழக்கம்போல் இடையில் வந்து குலைத்து விட்டாயடி என் செல்லமே."
"உன் சிந்தையில் எப்போதும் நானிருக்க வேண்டும் கண்ணா. எனக்குத் தெரியாமல் வேறு யாரும் இருக்கக் கூடாது கண்ணா."
"கண்ணம்மா, நீ எப்போதும் என் ஆழ்மனத்தில் குடியிருக்கின்றாய். அதிலிருந்து உன்னை நான் விடுவிக்கப் போவதேயில்லை. ஆனால் நான் சிந்திப்பது என் ஆழ்மனத்தாலல்லவே கண்ணம்மா."
"ஆழ்மனத்தில் நானிருக்கிறேன் என்கின்றாய். சிந்திப்பதோ அம்மனத்திலால் அல்ல என்கின்றாய். குழப்புகிறாயே கண்ணா."
"கண்ணம்மா, ஆழ்மனம் வேறு. சிந்திக்கும் புறமனம் , நனவு மனம் வேறு. புறமனத்தால் சிந்திக்கின்றேன்.ஆனால் ஆழ்மனத்தில் எப்போதும் போல் நீ நிறைந்திருக்கின்றாயடி"
'கண்ணா , உன் ஆழ்மனத்தில் மட்டுமல்ல, புறமனத்திலும் நான் தான் எப்போழுதும் நிறைந்திருக்க வேண்டும்." என்று செல்லமாகக் கட்டளையிட்டாள் என் கண்ணம்மா.
Wednesday, November 30, 2022
இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.
இன்று தற்செயலாக நண்பர் வரதீஸ்ரவன் 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் வரும் 'தந்தையைப் போல் உலகில் தெய்வம் உண்டோ' என்னும் பாடலுக்கான யு டியூப் இணைப்பினை அனுப்பியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகளைக் கேட்டபோது,
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
உண்ணாமல் உறங்காமல்"
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா"
குறிப்பாகக் 'காரிருள் போலே பாழான சிதையில்வ் கனலானார் விதி தானா' என்னும் வரிகளைக் கேட்டபோது அவர் சிதையில் தனித்து எரிந்த காட்சி படமாக விரிகின்றது.
Tuesday, November 29, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 13 - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை போன்ற உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.
கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:
"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று கூறினாய் அல்லவா?"
"ஓம். கூறினேன் கண்ணம்மா. அதற்கென்ன?'
'கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"
"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."
Friday, November 25, 2022
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (12) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்!
"கண்ணம்மா நீ ஓர் அலையடி"
"கண்ணா நான் அலையா?"
"கண்ணம்மா நீ ஒரு துகளடி"
"நான் துகளா கண்ணா?"
'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."
"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"
"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."
"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "
"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான் நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (11) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் பதினொன்று - இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று.
"கண்ணம்மா, இயற்கை எவ்வளவு அழகானது. படைப்புத்திறன் மிக்கது." என்றேன்.
அதற்கு அவள் இவ்விதம் பதிலிறுத்தாள்:
"கண்ணா, நீ கூறுவது மிகவும் சரியான கூற்று. உண்மையில் நானும் இவ்விதம் அடிக்கடி எண்ணுவதுண்டு. உண்மையில் இயற்கையின் அழகு, நேர்த்தி, படைப்புத்திறன் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. இவை பற்றி அறிய, புரிய என் இருப்பு முழுவதையும் அர்ப்பணித்தாலும் நான் மகிழ்வேன் கண்ணா."
"கண்ணம்மா, உண்மையில் இயற்கையின் படைப்புத்திறனே என்னைப் பெரிதும் வியக்க வைக்கின்றது."
"கண்ணா, வெளியில் விரிந்திருக்கும் இப்பிரமாண்டமான பிரபஞ்சம் மட்டுமல்ல, கண்ணுக்கே புலப்படாத குவாண்டம் உலகிலும்தான் எவ்வளவு நேர்த்தியாக எல்லாமே படைக்கப்பட்டுள்ளன. உள்ளும் , வெளியும் காணும் அனைத்திலுமே படைப்புத்திறன் வெளிப்பட்டு என்னை வியக்க வைக்கின்றது."
அருகிலமர்ந்து
என் தோளுடன் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்தை, என்
கண்ணம்மாவை, ஒரு கணம் நோக்குகின்றேன். பொட்டும் , இரட்டைப்பின்னலுமாக
பதின்ம வயதுப்பிராயத்தில் காட்சி தந்ததுபோலவே இன்றுமிருக்கின்றாள். நான்
அவளையே வைத்த கண் வாங்காது உற்றுப்பார்க்கவே அப்பார்வையின் வீச்சு
தாங்காமல் ஒரு கணம் வெட்கம் கவிழ முகம் தாழ்த்தினாள். மறுகணமே தன்னைச்
சுதாரித்துகொண்டாள். அத்துடன் கேட்டாள்:
"என்ன பார்க்கிறாய் கண்ணா?"
"இல்லை,
இந்த அழகு, இந்தச் சிரிப்பு, இந்தக் குறும்பு இவையெல்லாம் உண்மையா? இங்கு
நான் படைப்புத்திறனை , இயற்கையின் படைப்புத்திறனை வியக்கின்றேன் கண்ணம்மா.
கண்ணம்மா, நான் இயற்கையை, இந்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கித்தான்
கூறுகின்றேனடி, அனைத்தையும் படைத்ததாகக் காண்கின்றேன். நாம் எம் புலன்களைக்
கொண்டு இயற்கையை நூறு வீதம் அறிய முடியாது. இல்லையா? அதுவரை ,
அவ்விதமானதொரு அறியும் நிலை வரும்வரை , இயற்கையே என் கடவுள். நாம்
அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள். இதுதான் என் நிலைப்பாடு."
Tuesday, November 22, 2022
- எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியம் சிறந்த கலை, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது.
**********************************************************
(பதிவுகள்.காம்) ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன் அவர்களது எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால் இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ; சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.
கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.
அக்கரைப் பச்சையாக மாயத் தோற்றம் தரும் விடயங்கள் நிஜத்தில் அவ்வாறல்ல என்ற புரிதல் இவ்விரு நாவல்களையும் வாசிக்கும் போது தோன்றியது. இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களும், மூடிமறைப்புகளும், சட்ட மீறல்களும் சகஜமானவை என்பது பொதுவான அபிப்பிராயம். வியப்பேதும் இல்லை. ஆனால் 'உலகின் பொலிஸ்காரன்' என்ற நிலையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும் இவ்வாறான நிகழ்வுகள் தவறான புரிதல்களினால் இடம்பெறுகின்றன என்பது வியப்புக்குரியது.
எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன. படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.
Wednesday, November 16, 2022
தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (10) - ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன் -
எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.
"என்ன கண்ணா யோசனை?"
எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.
"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"
"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."
"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில் பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -
வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன். இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.
"என்ன எவளைப்பற்றி யோசனை?"
எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.
"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான் கண்ணம்மா"
"கண்ணா, இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"
"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும் வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."
'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.
அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.
Tuesday, October 25, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (7) ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.
அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.
நானே எதிர்பாராதவாறு, நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த, என் பால்யகாலத்து விருப்புச் சஞ்சிகைத் தொடரொன்று அழகாக பைண்டு செய்யப்பட்ட நிலையில் கிடைத்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையொட்டிய உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் புனைகதை. புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன். அழகான கையெழுத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "என் பால்ய காலத்துச் சகிக்கு என் பிரிய அன்பளிப்பு" எழுதியவர் பெயரைப்பார்த்தேன். என் பதின்மப் பருவத்தில் என் பால்ய காலத்துச் சகிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த புத்தகம் அது.
இப்பொழுது சொல்லுங்கள். உங்களால் இது போன்றதொரு பழைய புத்தகத்தைப் புதுப்புத்தக்கடைகளிலொன்றிலாவது வாங்க முடியுமா? பழைய புத்தகக்கடைகளில் பழைய புத்தகங்கள் மட்டும்தாம் கிடைக்கவேண்டுமென்பதில்லை. பழசாகிவிட்ட இதயங்களும் அங்கு கிடைப்பதுண்டு.
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (6): ஒட்டகங்கள் - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!
என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும் , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன். அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.
ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் எல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.
"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"
எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.
"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"
"உன் மனத்திலை இருக்கிறதைக் கண்டு பிடிக்கும் சக்தியெல்லாம் எனக்க்கில்லை கண்ணா. பேசாமல் நீயே சொல்லிவிடு."
"இல்லை. உனக்கு ஒரு துப்பு தருகின்றேன். அதிலிருந்து கண்டு பிடித்துக்கொள். இது ஒரு மிருகம்."
"மிருகமா? " என்று கூறிவிட்டு ஒருமுறை கலகலவென்று சிரித்தாள் மனோரஞ்சிதம்.
"மிருகமென்றால் மிகவும் இலகுவானதாச்சே. உனக்கு மிகவும் பிடித்த மிருகம், பறவையக் கண்டு பிடிப்பது அவ்வளவின்றும் கஷ்ட்டமானதல்ல கண்ணா."
இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள் :" நீ குறிப்பிடும் மிருகம் இந்தியாவில் ராஜஸ்தானில் காணப்படும் ஒன்றா?" கூறியவள் கண்களையும் சிமிட்டினாள்.
"ஏன் கண்ணம்மா சுற்றி வளைப்பு. நீதானே கண்டுபிடித்து விட்டாயே. பேசாமல் மிருகத்தின் பெயரையே கூறுவதுதானே."
அதற்கு மனோரஞ்சிதம் அருகில் ஓட்டும் வகையில் வந்து "ஓட்டட்டுமா. இந்த ஒட்டகத்துடன் ஒட்டட்டுமா" என்று என் மீது தன் உடலால் பலமாக இடித்தாள்.
அவளது மென்னுடல் பட்டு என்னுடல் ஒரு கணம் சிலிர்த்தது.
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!
மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.
"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."
"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.
"யானையா?"
'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.
"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா. இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."
"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே. பிரச்சினை என்னவென்றால்...."
"என்ன பிரச்சினை கண்ணம்மா?"
"இலக்கியத்தின் போக்குகள் அனைத்துமே மனித இருப்பைப் பல்வழிகளில் வெளிப்படுத்துபவை. மனிதரின் அறிவு, புரிதலுக்கேற்ப இவையும் வேறுபடும். மனிதர்கள் எல்லாரும் ஒரே நிலையில் அறிவைப்பொறுத்தவரையில் இருப்பவர்கள் அல்லர். பல்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள். எல்லாராலும் எல்லாப் போக்குகளையும் இரசிக்க முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இல்லையா கண்ணா?"
"அம்மாடியோவ்.. என் கண்ணம்மாவுக்குள் இவ்வளவு விசயங்களா? உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறாயடி கண்ணம்மா."
"ஏன் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருப்பதை நம்ப முடியவில்லையா கண்ணா" இவ்விதம் கேலியாகக் கண்களைச் சிமிட்டிய மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) :மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?
'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.
'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.
'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"
'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'
'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."
'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'
'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாயடி.'
'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."
'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'
Wednesday, October 5, 2022
தொடர்கதை (3) - அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்! - வ.ந.கிரிதரன் -
தட்டையர்கள் என் மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில் வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள். முக்கிய வேறுபாடு மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.
Sunday, October 2, 2022
தொடர் கதை - நவீன விக்கிரமாதித்தன் (2) மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்! - வ.ந.கிரிதரன்
அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!
இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
கட்டடக்காட்டு
விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப்
பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு
பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு
பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில்
'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால்
வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம
வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின்
இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி,
இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும்
பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம்
தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப்
பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை
மறந்திருக்கின்றேன்.
தொடர் நாவல் : நவீன விக்கிரமாதித்தன் (1) - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!
அடடா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.
Wednesday, September 28, 2022
கவிதை: வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (7): நாற்பரிமாண ஓவியக் கூறுகள் நாம் கண்ணம்மா!
விரிபெருவெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!
பெரு
வெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணம்மா!
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணம்மா!
இவ்விதம் இருப்பதில், இவ்விதமெண்ணி
இருப்பதிலுள்ள சுகம் நீ அறிவாய்தானே
கண்ணம்மா!
Thursday, June 23, 2022
My opinion: Wake Up Canadian Universities! It's is time to change!
It's time for Canadian Universities to take the PhD admission process in their hands. Currently students who are admissible can't pursue their studies unless they find so called supervisors , the professors. Any admitted students found admissible should be placed under a supervisor by the universities. If a student is admissible to a PhD program that means he or she is qualified to pursue a PhD. Currently this is not the case. An admissible student has to find a supervisor.
Tuesday, June 21, 2022
The Experience of Diaspora to SriLankan Tamil Literary Oeuvre; Changing Landscape and Identities in Tamil Culture! By Hildegard Anne Maria, MA English, St.Alosyius College, Mangalore, India
Wednesday, April 6, 2022
(பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
Saturday, January 15, 2022
வ.ந.கிரிதரனின் நேரம்: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் வெளி , நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிக் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம்
வ.ந.கிரிதரனின் நேரம்: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் வெளி , நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிக் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம். அவை பற்றி நான் எனது 'வ.ந.கிரிதரனின் நேரம்' யு டியூப் சானலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளிகள் வருமாறு;
1. வெளி, நேரம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள்! பகுதி ஒன்று. - https://www.youtube.com/watch?v=8mPlpoOiCm4
2 பகுதி இரண்டு. ஈர்ப்பு விசை பற்றிய பொதுச் சார்பியற் கோட்பாடுகள் (The General Theory of Relativity) - https://www.youtube.com/watch?v=FOd6KFhx8Bg
Tuesday, January 11, 2022
வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்'நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு!
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...