- இசை & குரல் : AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=oXpKNOlmVTw
இக் கவிதையை என் குறிப்பேட்டில் 14-11-1982 அன்று எழுதினேன். அன்றிருந்த, அக்காலச் சூழலின் வெளிப்பாடாக வெளிப்பட்ட என் மனத்தின் வெளிப்பாடு. -
என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுய கவுரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகர முடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினைக் குதறி எறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியின் ஒவ்வொரு துளியும்,
இளம்பரிதியின் ஒவ்வொரு கதிரும்,
விருட்சத்தின் ஒவ்வோர் இலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!