அத்தியாயம் 15 - கண்ணம்மா எழுதிய கவிதை!
"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."
மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்.
"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.
"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "
"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"
"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"
"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கணமணி."
"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"
"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."
"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல் முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."
'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும். ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."
"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி."
"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"
"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"