- எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியம் சிறந்த கலை, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது.
**********************************************************
(பதிவுகள்.காம்) ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை' என்பதாகவே அமையும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான படைப்பாளி தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான். வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996 இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன் அவர்களது எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால் இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ; சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.
கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.
அக்கரைப் பச்சையாக மாயத் தோற்றம் தரும் விடயங்கள் நிஜத்தில் அவ்வாறல்ல என்ற புரிதல் இவ்விரு நாவல்களையும் வாசிக்கும் போது தோன்றியது. இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களும், மூடிமறைப்புகளும், சட்ட மீறல்களும் சகஜமானவை என்பது பொதுவான அபிப்பிராயம். வியப்பேதும் இல்லை. ஆனால் 'உலகின் பொலிஸ்காரன்' என்ற நிலையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும் இவ்வாறான நிகழ்வுகள் தவறான புரிதல்களினால் இடம்பெறுகின்றன என்பது வியப்புக்குரியது.
எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன. படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.