அத்தியாயம் இருபது: கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை!
"என்ன கண்ணா?" என்றவாறு என்னைத் தன் ஓரக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தாள் மனோரஞ்சிதம்.
"இது நானுனக்குச் சமர்ப்பிக்கும் சொல் மாலை."
"என்ன கண்ணா இது. சொல் மாலையா? எனக்கா? ஏன்? ஏன் இப்போ?"
"கண்ணம்மா, இப்போ இல்லையென்றால் எப்போ? அதுதான் இப்போ."
"சரி,சரி கண்ணா. அதுதான் உன் விருப்பமென்றால் தாராளமாகச் சமர்ப்பி உன் சொல் மாலையை. மாலையை எங்கே சமர்ப்பிக்கப்போகிறாய்? இதுதான் மலர் மாலை அல்லவே கண்ணா. அது சரி ஒரு கேள்வி."
"கேள்வியா? என்ன கேள்வி கண்ணம்மா. கேள்வி இல்லாமல் இருப்பில் எதுவுமில்லை. கேளு கண்ணம்மா."
"கண்ணா, இவ்விதமான சமர்ப்பணத்துக்கு நான் அப்படியென்ன செய்து விட்டேன். "
"கண்ணம்மா, நீ செய்தவற்றைப் பட்டியலிடுவேன். கேள். "
"அப்படியா? சரி. சரி. பட்டியலிடு என் கண்ணா. பார்ப்போம் உன் பட்டியலை"
வழக்கம்போம் அவள் குரலில் தொனித்த குறும்பு கலந்த தொனியை அவதானித்தேன்.
நான் தொடர்ந்தேன்:
"முதன் முதலாக என் குடும்பத்தவர் அல்லாத ஒருவரிடம் நான் அன்பு கொண்டது உன்னிடம்தான். அதற்காக உனக்கு நிச்சயம் நன்றி கூற வேண்டும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான் கண்ணம்மா."