4-ம் அத்தியாயம்: தங்கமணி
“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் 'வழமையான இடம்.' இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி 'ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அதை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!