எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.
இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.
இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.