ஐந்தாம் அத்தியாயம்: சலனம்
பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!
சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.
பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்? இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.
ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.