-எழுத்தாளர் கலைச்செல்வன் - |
கவிஞர் வாசுதேவனின் 'தொலைவில்' கவிதைத்தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு கவிதை கண்ணில் பட்டது, கவிதையின் தலைப்பு 'உயிர்நிழல்'. கவிதையை வாசித்தபோது அது 'உயிர்நிழல்' கலைச்செல்வனைப் பற்றியது என்பதை அறிய முடிந்தது.
'சத்தமிட்டுச் சிரித்து
புயலைப்போல் சினந்து
ஆழங்களில் அமிழ்ந்து
உச்சிகளில் தாவி நீ செய்யும்
உன்னத மாயவித்தைகள்
அவற்றின் உச்ச நிலைகளில்
அமைதியுற்று
உன் உதடுகளிலிருந்து
புகையாய்ப் போயின.
ஆவேசத்துடன் ஆர்ப்பரித்த் நீ
அடைய முடியாததன் முன்னால்
கூற முடியாததன் கொடூரத்தின் முன்னால்
கூற்றுகளுக்கப்பாற்பட்டவை முன்னால்
குழந்தையாய் நின்றாய்.'
கவிஞரின் மேற்படி வரிகள் கலைச்செல்வனின் ஆளுமையைச் சிறப்பாக விபரிக்கின்றன. கவிதையின் வரிகள் அவரது கலைச்செல்வனுடான நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவன. இக்கவிதை வரிகள் எனக்குக் கலைச்செல்வனைப் பற்றிய நினைவுகளைச் சிறகடிக்கச் செய்து விட்டன. கவிதைத் தொகுப்பின் இன்னுமொரு கவிதை 'மனமெனும் மரங்கொத்தி' சிறப்பான உவமை. படிமம். தலைப்பை 'மனமெனும் மரங்கொத்தி' என்று உவமையாக வைத்திருப்பதற்குப் பதிலாக 'மனங்கொத்தி' என உருவகமாக வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். என் மனங்கொத்தியையும் இக்கவிதைகள் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைக்கொத்தியெடுக்க வைத்துவிட்டன.