- டானியல் அன்ரனி - |
'டானியல் அன்ரனி' எழுத்தாளர் டானியல் அன்ரனியின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு.ம் கருப்புப் பிரதிகள் வெளியீடாகக் கடந்த ஆண்டு வெளியான தொகுப்பு. இத்தொகுப்பின் முதற் கதை 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'. தொகுப்பின் முதற் கதை மட்டுமல்ல, முக்கியமான கதையும் கூடத்தான். இக்கதை ஏற்கனவே சமர் இலக்கிய வட்ட வெளியீடான 'வலை' சிறுகதைத்தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. 'வலை' தொகுப்பின் இரண்டாம் பதிப்பு சுரபி பதிப்பக வெளியீடாக வெளியானது. வலையில் வெளியான கதைகளுடன், கவிதைகள் , கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டு வெளியான தொகுப்பே கருப்புப் பிரதிகள் வெளியிட்ட 'டானியல் அன்ரனி' தொகுப்பு.
கதை சம்மாட்டியார் சவிரிமுத்தர், அவரிடம் வேலை பார்க்கும் மலையகத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை உள்ளடக்கிப் பின்னப்பட்ட கதை. கதையின் ஆரம்பத்தில் சவிரிமுத்தர் வீடு நோக்கி வருகின்றார். வரும் வழியில் பெருமாளைப் பொலிஸார் ஜீப்பில் ஏற்றிச் செல்வதைக் காணகின்றார். கதையின் இறுதியில் அதற்கான காரணம் மறைமுகமாக வெளிப்படுகின்றது.